பத்திரிகை பேட்டிக்காக பிரபலங்களை நேரடியாக சந்தித்த போது கிடைத்த அனுபவங்களின் தொகுப்பு நுால். சுவையான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
விபத்தின் போது முகத்தின் ஒருபகுதி எரிந்த நிலையில் ஒருவரை, பிரபல நடிகர் சிவாஜி பார்க்க நேரிடுகிறது. அதை நினைவில் கொண்டு, தெய்வ மகன் படத்தில் வந்த கேரக்டருக்கு, ‘மேக்- அப்’ போட்டபோது சிறப்பு கவனம் செலுத்தியது குறித்து சுவையான தகவல்கள் பதிவாகியுள்ளன.
ஒரு சூப்பர் ஸ்டார் நடிகருக்கு இருந்தது போல் ஏகோபித்த வரவேற்பை பெற்ற முதல் தமிழ் திரைப்பட இயக்குநர் ஸ்ரீதர். பிரபல சினிமா இயக்குநர் கே.பாலசந்தர் படைப்புகளில், கதாபாத்திரங்கள் வழியே தான் கதை சொல்லப்படும்.
கதாபாத்திர அமைப்பு கற்பனை, யதார்த்தம், புதுமை என்ற வகையில் இருக்கும் என்பதாக ஒரு பேட்டி தகவல் பதிவாகியுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்சிலைக்கு மாடலாக இருந்த ஓவியர் ராமு பற்றிய தகவல்கள், வரலாற்றை அறிய உதவுகின்றன.
டில்லி செஷன்ஸ் கோர்ட்டில் முதன் முறையாக படுக்கை அமைத்து, படுத்தவாறு சஞ்சய் காந்தி நீதிமன்றத்தில் இருந்தது குறிப்பிடப்பட்டு உள்ளது. இது ஒரு நிகழ்வாக பதிவாகியுள்ளது.
பிரபல சினிமா இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையை, எம்.ஜி.ஆர்., அனுமதிப்பது பற்றிய தகவல்கள் உள்ளன. அது, மற்றொரு கலைஞனை நேரில் பாராட்டும் பரந்த மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.
‘நான் சீதையோ, திரவுபதியோ அல்ல; ஒரு சாதாரண பெண். என் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை, உள்ளதை உள்ளபடி பகிர்ந்து கொள்கிறேன். அதை படித்துவிட்டு, என்னை பற்றி முடிவு செய்யுங்கள்...’ என வெளிப்படையாக எழுதியவர் ஜெயலலிதா.
இது போன்ற தகவல்களை ‘ட்ரீட்’ தந்து அமைந்துள்ள நுால்.
– இளங்கோவன்