எதார்த்தத்தை பிரதிபலிக்கும் நிகழ்வுகளை மேற்கோள்களாக எடுத்துக்காட்டி, வளமான வார்த்தைகளால் வாழ்வுக்கு வழிகாட்டும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். சொல்லுக்கும், செயலுக்கும் இடைவெளி அதிகமானால் போலித்தனம் போர் தொடுக்கும்; குறைவானால் உண்மை உயிர்த்தெழும் என்கிறது.
இயற்கையை தொலைத்து செயற்கையை தேடிச் செல்லும் முன்னேற்ற வாழ்வு செல்லாத சொத்து. அன்பை கொடுத்து அன்பை பெறுவோம். பிறரை மகிழ்வித்து மகிழ்வோம். வேர்கள் இல்லா விழுது போல அனுபவங்களை தட்டிக் கழிப்பது பழக்கமாகிவிட்டது.
நிலையான செல்வங்கள் தாங்கிப் பிடிக்கும் விழுமியங்களாக உள்ளன. விழுமியங்கள் வீழாத வரை வீழ்ச்சியே இல்லை என்பது போன்ற சிந்தனைகளால் வாழ்க்கையை நம்பிக்கையாக்கி செதுக்கியுள்ள நுால்.
– புலவர் சு.மதியழகன்