உணர்ச்சிகரமான நடையில் செல்கின்ற உள்ளத்தை ஊடுருவி பதிந்து கொள்ளும் பாங்கில் அமைந்துள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
குழந்தைச் செல்வம் இல்லாமல் வயதான தம்பதியரின் மனநிலையை துல்லியமாய் பிரதிபலித்து காட்டுவதாக அமைந்துள்ளது, மனைவியின் நினைவில் என்ற அருமையான கதை. தம்பதியர் பேசிக்கொள்ளும் வார்த்தைகளில் தான் என்ன உணர்ச்சிக் கலவை.
தோற்றவன் குரல் என்ற சிறுகதை மிக நேர்த்தியானது. அடையாளம் என்ற கதை மீசையை முன்வைத்து எழுதப்பட்டிருந்தாலும்,சமுதாயத்தில் முன்பு மலிந்திருந்த சாதிக் கொடுமைகளை சாடிச் சொல்கிறது. கால ஓட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும்மருத வேல் மூலமாக எடுத்துரைக்கிறது. நீதி போதனை வகுப்பிற்கு சென்று வந்த உணர்வை ஏற்படுத்தும் நுால்.
– டாக்டர் கார்முகிலோன்