ஏழுமலையான் கோவில் பற்றி ஏராளமான செய்திகளை தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால், இதுவரை அறியாத தகவல்களின் தொகுப்பாய் மிளிர்கிறது இந்த இனிய நுால்.
திருப்பதி லட்டை சுவைத்து மகிழ்ந்திருப்பீர்கள். அதை தயாரிக்கும் முறை, தினமும் எவ்வளவு பொருட்கள் இதற்காக பயன்படுத்தப்படுகின்றன, எவ்வளவு லட்டு விற்கிறது... இன்னும் பல அரிய தகவல்கள் நுாலில் கொட்டிக் கிடக்கின்றன.
லட்டின் இனிமை ஒரு புறம் இருக்க, மறுபுறம் ஏழுமலையான் செய்த அற்புதங்கள் இந்த நுாலில் ஏராளமாக இருக்கின்றன. திருப்பதியில் தினமும் குவியும் கோடிகளை எண்ண வேண்டும், அதைக் கண்ணால் காண வேண்டும் என்று உங்களுக்கு ஆசை இருக்குமானால், நீங்களே அதில் பங்கேற்க முடியும்.
ஆனால், அதற்கான விதிமுறைகளை கடைப்பிடித்தாக வேண்டுமே! அந்த நடைமுறை குறித்த விளக்கம் நுாலில் இருக்கிறது. சீனிவாச பெருமாள் உண்டியலில், இவ்வளவு பணம் சேரும் ரகசியம் என்ன தெரியுமா? இதற்கான விடை நுாலில் இருக்கிறது.
நமக்கெல்லாம் லட்டு தரும் ஏழுமலையான், தினமும் சாப்பிடுவது என்ன தெரியுமா? அதிலும் ஒரு சாதாரண பாத்திரத்தில்... திருப்பதியில் தினமும் காலையில் சுப்ரபாதம் கேட்கும்.
ஆனால், ஒரே ஒரு மாதம் மட்டும் கேட்காது. காரணம் என்ன? அப்படியானால், அந்த மாதத்தில் வேறு என்ன பாடி, வேங்கடவனை எழுப்புவர்... இப்படி பலப்பல அதிசய தகவல்கள் உள்ளன. அனுபவமிக்க பத்திரிகையாளர் பி.சுவாமிநாதன், இந்த நுாலை எளிய நடையில் எழுதியுள்ளார்.
இனி, ஏழுமலையானை தரிசிக்க செல்லும் முன், இந்நுாலை படித்து சென்றால், திருப்பதியில் மேலும் அதிசயங்களை கண்டு வர இயலும்.
– தி.செல்லப்பா