காவல் துறையில் எஸ்.பி., என்ற உயர் பொறுப்பில் பணியாற்றிய காலத்தில் பெற்ற அனுபவத்தை சமூகவியல் பார்வையில் சொல்லும் நுால். சமூக சீரழிவுகளுக்கு உரிய காரணங்களை அலசி ஆராய்ந்து தீர்வுகளை முன் வைத்து, ‘தினமலர்’ நாளிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
சமுதாயத்தில் வன்முறைகள், அவற்றை நிகழ்த்துபவர்களால் மட்டும் தொடர்வதில்லை. வன்முறை செயல்களை தடுக்கவும், தட்டிக் கேட்கவும், கண்டிக்கவும் அதிகாரம் பெற்றவர்களும், தீமைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் வாய்ப்பும், சக்தியும் உள்ளோரும் காட்டும் மெத்தனத்தாலும் நிகழ்கின்றன என்பதை ஆணித்தரமாக உரிய ஆதாரங்களுடன் நிறுவுகின்றன.
பொறுப்புணர்ந்து பணியாற்ற வேண்டிய அதிகாரிகளிடம் காணப்படும் நேர்மையின்மை, பேராசை, தேவையற்ற அச்சம் போன்றவை, நியாய செயல்பாடுகளுக்கு பெரும் தடையாக இருப்பதாக சுட்டிக்காட்டுகின்றன.
காவல் துறையில் பணியாற்றிய காலத்தில் பல்வேறு தரப்பினருடன் பழகியபோது கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் தெளிவாக அலசி கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சட்டத்தை அமல்படுத்தும் போது நடைமுறையில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வழிமுறைகளை சுவாரசியம் குன்றாமல் விளக்கியுள்ளார். ரவுடிகள் எண்ணிக்கை அதிகரிப்பு, சமூகத்தில் குற்றங்கள் பெருகுவதற்கு காரணங்களை ஆராய்ந்து, சிக்கல்களை தீர்க்கும் வழிகள் கூறப்பட்டுள்ளன.
பல்வேறு துறைகளிலும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆதாயம் அடைவோரை சுட்டிக்காட்டும் அதேவேளை, காரணமற்ற கட்டுப்பாடுகள், தீவிர செயல்பாட்டை தடுத்து விடுவதை எச்சரிக்கையுடன் கவனப்படுத்த தவறவில்லை.
அரசியல் சதுரங்கத்தில் தேர்தலின் பங்கு துவங்கி, நிலையாமையே இவ்வுலகின் பெருமை என்பது வரை, 19 வித்தியாசமான தலைப்புகளில் பிரச்னைகள் அலசலாக இடம் பெற்றுள்ளன.
சமுதாய இயக்கத்தில் துாணாக நின்று செயல்படும் பல துறைகள் சார்ந்து சிந்தனைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சமுதாயம் மேம்பட நேர்மை மதிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ள நுால்.
– மலர்