வியாசர் பாடிய பாகவதம் தான் பாகவதத்தின் துவக்கம். இதை தொடர்ந்து, 18ம் நுாற்றாண்டில் எழுப்பட்டது பாகவதப் பாரதம்; காப்பியமாகப் படைக்கப்பட்டுள்ளது.
திருமால் அவதாரங்கள் முதலாக அனைத்தையும் தெளிவுபடுத்தும் இந்தக் காப்பியம், கண்ணனின் அவதாரத்தைத் தெளிவாக எடுத்துரைக்கிறது. பாரதக் கதையும், பாகவதமும் கலந்து பாடப்பட்டது என்பதை ஆராய்ச்சி முன்னுரையில் எடுத்துரைத்துள்ளார்.
ஏறத்தாழ 26 ஆயிரம் அடிகளைக் கொண்டது. இதற்கு அருஞ்சொற்பொருள் வழங்கியதுடன், தேவைக்கேற்ற விளக்கங்களையும் எழுதிப் பதிப்பித்துள்ளார்.
அம்மானையாகப் பாடப்பட்டுள்ளது; பேச்சு வழக்கு சொற்களே பெரும்பாலும் இடம்பெற்றுள்ளன. மன்னர் சந்தனு பெயரைச் சந்தணர் என்றும், தேவேந்திரனைத் தெய்வேந்திரர் என்றும் வான்மீக முனிவரை, வாமீகர் என்றும் பாடியுள்ளார். மக்கள் பேச்சு வழக்கில் பெயர்கள் எப்படி உள்ளனவோ அப்படியே பாடியுள்ளது. வாய்மொழி இலக்கியத் தன்மை கொண்டது. பாகவதம் தொடர்பான ஆய்வாளர்களுக்குப் பயன்படும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்