ஐ.ஏ.எஸ்., அதிகாரி கே.சிவபிரசாத் எழுதிய, ‘கீதா ஆச்சரன்’ என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாக மலர்ந்துள்ள நுால்.
பகவத் கீதையில் கிருஷ்ணர் அருளிய ஸ்லோகங்களை மேற்கோள் காட்டுகிறது. கீதை காட்டும் வழியை எளிமையான சொல்லாக்கம், ஆழமான கருத்தாக்கத்துடன் விளக்குகிறது.
முக்கியமாக...
1 அகங்காரத்தின் எத்தனையோ உருமாற்றங்களில் ஒன்றே ஈகோ
2 உண்மை மீதான பல்வேறு கருத்துக்களே இன்று உலகில் காணும் வேறுபாடுகளுக்கு காரணம்
3 தீய செய்கையை சிந்தனை நிலையில் விட்டொழிக்க, செடியாக இருக்கும் போதே வளைத்து விட வேண்டும்
4 கிருஷ்ணரிடம் அடைக்கலம் அடைந்தால் எல்லா துன்பங்களில் இருந்தும் விடுபடலாம்.
இதுவே பக்தியோகத்தில் சரணாகதி எனப்படுகிறது. இந்த செயலே பக்தியின் அடிப்படை. அகங்காரம் என்பது பலவீனம்; பயத்தின் அறிகுறி.
இது சக்தி, உடல், உடைமைகள் மற்றும் அதன் இருப்புக்கான அங்கீகாரத்தை நாடுகிறது. எனவே, பரமாத்மாவிடம் அனைத்தையும் விட்டுவிட வலிமையும், அச்சமின்மையும் தேவை.
குணங்களாலும், கர்மங்களாலும் மனிதர்கள் நான்கு வகையாக இருக்கின்றனர் என்பது உண்மை. ஆனால், பிரிவுகள் என்பது பாரம்பரியமானது; பிறப்பை அடிப்படையாகக் கொண்டது என்பது பொய்யாக கட்டப்பட்டது. இது போன்ற கருத்துக்கள் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீமத்பகவத் கீதைக்கு தமிழில் ஏராளமான பொழிப்புரை நுால்கள் வெளிவந்து இருந்தாலும், இதை படிக்கும் போது, ஆன்மிக வாழ்வில் புதிய அனுபவத்தை உணர முடியும்.
-– இளங்கோவன்