குழந்தையா, தெய்வமா, அவதாரமா, சித்தரா... அய்யப்பனைப் பற்றி இப்படி சிந்தனை ஓடாத உள்ளங்களே இல்லை. இது போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் நுால். மலையாளத்தில் எழுதிய நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
துவக்கத்தில் கொலைகள், ஆக்கிரமிப்பு முயற்சி என, கிரைம் ஸ்டோரியாக நகர்கிறது. கிரிக்கெட்டின் கடைசி பந்தில் 6 ரன் எடுக்க பேட்ஸ்மேன் தயாராக நிற்க, நாற்காலி நுனிக்கே வந்து விடும் பார்வையாளருக்கு ஏற்படும் படபடப்பு உணர்வை கதை நகர்த்தலில் எங்கும் காண முடிகிறது.
‘சிவ, விஷ்ணுவின் மகனே சாஸ்தா’ என்ற வரலாறு தான் பெரும்பாலும் அறிந்திருப்பது. மனிதப்பிறவி எடுத்து வந்தபோது அய்யப்பன் என்ற பெயர் பெற்றதாக சொல்வர். தாய்க்காக, புலிப்பால் கொண்டு வந்தது பற்றிய தகவல் அனைவரும் அறிந்தது.
ஆனால், பிறப்பிலே அய்யப்பன் புலிகளோடும், மற்ற மிருகங்களோடும் விளையாடி மகிழ்ந்திருந்தது இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. அய்யப்பனுக்கு பயிற்சி கொடுத்தோர் பற்றிய புதுப்புது தகவல்களுடன் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது.
நாடி ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதோர், இந்த புத்தகத்தை படித்த பின், நம்புவர் என்பது திண்ணம். எதிர் தரப்பினருக்கு காயம் ஏற்படுத்தாமல், கோபத்தை தீர்க்க வேண்டும் என்ற அய்யப்பனின் கொள்கை வழி நடந்தால் பாரதம் பாதுகாக்கப்படும்.
இந்த எண்ணத்தை வாசகர்கள் மனதில் விதைக்கிறது இந்த புத்தகம். பக்தி, கிரைம், அரசியல், தேசப்பற்று என அனைத்து வகை விதைகளும் துாவப்பட்டுள்ளன. அனைவரும் படிக்க வேண்டிய அற்புத படைப்பு.
– தி.செல்லப்பா