தமிழர்கள், சங்க காலத்திலேயே தொழில்நுட்ப அறிவு வாய்க்கப் பெற்றிருந்தவர்களாக இருந்தனர். அதற்கு சான்றாக சங்கப் பாடல்களில் இருந்து, பல்வேறு உதாரணங்களை காட்டி, இந்த நூலாசிரியர் ஆதாரங்களை நிறுவுகிறார்.
பயிர்த்தொழில், நெசவு, கட்டுமான இயல், மண்பாண்டம் செய்தல், இரும்புத் தொழில், பொன் தொழில், கடற்பயணம், தோல் பதனிடுதல், கண்ணாடி தயாரித்தல், மகளிர் ஒப்பனை, மதுவகைகள் தயாரிப்பு முறைகளும், தெரிந்திருந்ததையும், அன்றிருந்த தொழில்நுட்பங்களையும், ஆசிரியர் விரிவாக விளக்கி உள்ளார்.
நிறைவு தலைப்பாக, சங்க இலக்கியத்தில் தொழில்நுட்ப நூல்கள் என்ற தலைப்பில், அந்தந்த துறை சார்ந்த நூல்கள், சங்க காலத்தில் மக்களிடையே பயின்று வந்தன என, நிறுவ ஆசிரியர் முயல்கிறார்.
‘கருடன் சம்பா’ என்ற சிறந்த நெல்லின் பெயர், பெரும்பாணாற்றுப் படையில் குறிப்பிடப்பட்டிருப்பது, தாளடியில் (நெல் பயிரிட்டு அறுவடை ஆனபோது நிலத்தில் ஈரப்பதம் இருக்கும். அதிலேயே உளுந்து, பயறு பயிரிடுவது குறித்து, ஐங்குறுநூற்றில் குறிப்பிடப்பட்டிருப்பது, மெல்லிய வேலைப்பாடு கொண்ட ஆடைகள் நெய்யப்பட்டது குறித்து புறநானூறு, பொருநராற்றுப்படை, மலைபடுகடாம் நூல்களில் குறிப்பிடப்பட்டிருப்பது, குளிர்ச்சி பொருந்தியவையாக இருக்கும்படி இல்லங்கள் கட்டப்பட்டது குறித்து, புறநானூற்றில் சொல்லப்பட்டிப்பது என, பல சுவாரசிய தகவல்கள், புத்தகம் முழுவதும் நிறைந்துள்ளன.
அதேபோல், கடற்பயணம், கப்பல் கட்டுமானம் உள்ளிட்ட தகவல்களும், சங்க இலக்கியத்தில் உள்ளன என்பதை ஆசிரியர் தரவுகளோடு எடுத்து காண்பித்துள்ளார். தமிழ் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மட்டுமின்றி, அனைவருக்கும் பயன்படும் இந்த நூல்.
சொக்கர்