இலக்கியத் துறையில் மகா ஆளுமையாக விளங்கும் வைரமுத்துவின் படைப்பு உலக பரிமாணங்களை, பேராசிரியர்கள் அலசி ஆராய்ந்து எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ளது வைரமுத்தியம். கவிதை, நாவல், சிறுகதை, திரைப்பாட்டு, ஆராய்ச்சி, பயணக் கட்டுரை, வரலாறு, தன் வரலாறு என இலக்கியத்தின் எல்லா வகைமைக்குள்ளும் இயங்கியுள்ளதைக் காட்டுகிறது.
கவிதைப் பிரிவில் வைரமுத்து மற்றும் அரபுக் கவிஞர் நிசார் கப்பானி கவிதைகளை ஒப்பிட்டு முனைவர் அ.ஜாகிர் உசேன் எழுதியுள்ளார். அதில், நற்றிணை, குறுந்தொகை படைத்த சங்கப் புலவர்கள் வழித்தோன்றலான வைரமுத்து கவிதைகளில் இயற்கையும், காதலும் நிகரென காணப்படுவது போன்றே, கப்பானி கவிதைகளிலும் காதலி இயற்கையோடு ஒப்புமைப் படுத்தப்படுவதைச் சுட்டிக் காட்டுகிறார்.
வைரமுத்துவின், ‘சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்’ என்ற கவிதை நுால், தன் வாழ்வை எப்படி செதுக்கியது என்பதை விரிவாக விளக்கியுள்ளார், விருதுநகர் கலெக்டர் முனைவர் வீ.ப.ஜெயசீலன். தொல்காப்பியர் கூறும் எண் வகை மெய்ப்பாட்டியல் கோட்பாட்டோடு பொருந்தி, இளைய சமுதாயத்திற்கு வெற்றி சூத்திரங்கள் வழங்கியிருப்பதை விளக்கியுள்ளார். ‘ஐம்பது வயதில் புரிகிறது’ என்ற கவிதையில், ‘ஒவ்வோர் உடல் மீதும் மூத்தோர் திணிக்கும் ஆசை தானே பெயர்’ என பாடியிருப்பது பலருக்கும் பொருந்தும் என குறிப்பிட்டுள்ளார்.
வைரமுத்துவின் கவிதைகளை வாசிப்போர், ‘துன்பத்தில் துவள்வதில்லை; சோகத்தில் முடங்கி விடுவதில்லை; வீறுகொண்டு எழுந்து விடியல் நோக்கி பயணிக்கின்றனர்...’ என உறுதிப்படுத்தியுள்ளார், முனைவர் நம்.சீனிவாசன். அதற்கு எடுத்துக்காட்டாக, தமிழுக்கு நிறம் உண்டு என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள, ‘வியர்வையை அடுத்து விருது; தோல்வியின் மறுபக்கம் வெற்றி; இரவின் விளிம்பு தான் விடியல்; துன்பத்தை துவைத்தால் இன்பம்’ என்ற கவிதை வரிகளை குறிப்பிட்டு உள்ளார்.
இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல என்ற தலைப்பில் வைரமுத்து, ‘மனிதத் தவறுகளிலேயே மாபெரும் தவறான மரங்களை வெட்டுவது’ என கலங்கி, ‘மரங்கள் இல்லையேல் காற்றை எங்கே போய் சலவை செய்வது? மனிதனின் முதல் நண்பன் மரம்;மரத்தின் முதல் எதிரி மனிதன்’ என கண்ணீர் சிந்துவதை சுட்டிக்காட்டி சிந்திக்க வைக்கிறார். இது போன்றே, மகா கவிதை நுாலில் பூமியைக் கொத்திக் கொன்று கொண்டிருப்போரிடம், ‘தனக்குத்தான் சொந்தமென்று காக்கை கடல் கொத்துவது போல உனக்குத்தான் சொந்தமென்று பூமியைக் கொல்லுகிறாய் மானுடா... உன் குழி எவ்வளவு கொள்ளுமோ அவ்வளவே உன் மண்’ என எச்சரிப்பதை சுட்டிக் காட்டியுள்ளார், துபாயில் வசிக்கும் சசி எஸ்.குமார்.
தமிழ் மரபில் ஆழங்கால் பட்ட புலமையும், எதையும் புதிதாய் சொல்லும் வளமையும், அறிவையும் உணர்வையும் சரிவிகிதத்தில் சங்கமிக்கச் செய்யும் நேர்த்தியும், வைரமுத்துவின் படைப்புலக தனித்தன்மை தளங்களாக உரைக்கிறார் மரபின் மைந்தன் ம.முத்தையா. மரபுக்கும், புதுமைக்கும் பாலம் அமைத்துள்ளதை உதாரணங்களுடன் நிறுவுகிறார்.
ஐம்பூதங்களான நிலம், நீர், தீ, காற்று, வெளியின் இயல்புகளை, அறிவியல் அடிப்படையில் விவரிக்கிறது மகா கவிதை நுால். அவை காயம்பட்டுள்ள நிலையை கவலை தொனிக்க பாடியுள்ளதை சிறப்பாக பதிவு செய்துள்ளார் முனைவர் ரா.அறவேந்தன். வைரமுத்து எழுதிய திரைப்பாடல்களின் தொகுப்பான, ஆயிரம் பாடல்கள் நுால் குறித்து அலசியுள்ள எழுத்தாளர் ஆத்மார்த்தி, ‘காலைத்தென்றல் பாடிவரும் ராகம்’ என்ற பாடலில், ‘காலையின் புதுமைகள் அறியவே இல்லை’ என்ற வரியின் சிறப்பை நுணுக்கமாக அணுகி பதிவு செய்துள்ளார். தமிழை சாறு பிழிந்து தந்துள்ள, ‘வான்போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே’ என்ற வைரமுத்துவின் மொழி மாற்றுப்படப்பாடல் திறனை அழகாக விவரித்துள்ளார்.
முனைவர் ஆதிராமுல்லை, ‘பாலுாட்டிகள் இனத்திலிருந்து குரங்கு வந்து தாவுவதற்கும், குரங்கிலிருந்து மனிதன் குதிப்பதற்கும் இடையே எத்தனை லட்சம் ஆண்டுகளை காலம் தன் கடைவாயில் மென்று தின்றிருக்கிறதோ என்ற வைரமுத்துவின் வரிகளை, மாணிக்கவாசகர் எழுதிய, ‘புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்’ என்ற வரிகளுடன் ஒப்பிட்டு மகிழ்கிறார்.
அது போன்றே ‘உன்குழி எவ்வளவு கொள்ளுமோ அவ்வளவே உன் மண்’ என்ற வைரமுத்து வரிகளை, அவரது முன்னோடிக் கவிஞரான சுரதாவின், ‘ஆறடி நிலமே சொந்தமடா’ என்பதுடனும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய, ‘சட்டப்படி பாக்கப் போனா எட்டடிதான் சொந்தம்’ என்ற பாடல் வரியுடனும் ஒப்பிட்டு விளக்கியுள்ளார்.
புதுக்கவிதை வடிவில் வைரமுத்து எழுதிய பாரதியார் வாழ்க்கைச் சரிதமான, கவிராஜன் கதையில், கவித்துவ நேர்மை எளிமையாக வெளிப்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ளார், தென் சென்னை எம்.பி., முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன். மகாகவி பாரதியார் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றோர் எண்ணிக்கை 20க்கும் குறைவு என்பதை குறிப்பிட்டுள்ள வைரமுத்து, ‘இது புலிகளை மதிக்காத புழுக்களின் தேசமடா...இன்று நினைத்தாலும் தலையறுந்த சேவலாய்தவிக்கிறது நெஞ்சு’ என எழுதியிருப்பதை சுட்டிக்காட்டி, ‘தலையறுந்த சேவல்’ என்ற உவமை சொல்லின் வலி, கரிசல் காட்டில் வசிப்போருக்கு தான் புரியும் என குறிப்பிட்டுள்ளார்.
கள்ளிக்காட்டு இதிகாசம் நுாலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள நாகலட்சுமி சண்முகம், நாவலில் இடம்பெற்றுள்ள வட்டார வழக்குச் சொற்களை மொழிபெயர்க்க பட்ட பாடுகளை சுவையாக விவரித்துள்ளார். குறிப்பாக, மறுமாத்தம், பெரியாம்பளை, உருமால், கம்புக்கூடு, கோழிச்சாறு, ஆக்குப்பாரை போன்ற வழக்குகளை ஆங்கிலப்படுத்திய போது கவனம் குவித்ததை சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். வைரமுத்துவின் கருவாச்சி காவியம் ஒரு பெருங்காப்பியம் என்பதை கம்பர், வள்ளுவர், தண்டி படைப்புகளின் துணையுடன் நிறுவியுள்ளார் பேராசிரியர் எழில்முதல்வன். மேலும், ‘சிலப்பதிகாரம் 25 ஆண்டு கால கதையைக் கூறுகிறது; மணிமேகலை ஐந்தாண்டு கதையைக் கூறுகிறது; நளவெண்பாவும், நைடதமும், 15 ஆண்டு கால கதையை விவரிக்கின்றன’ என கூறி, கருவாச்சி காவிய கதை நிகழும் காலம் 51 ஆண்டுகள் என கணக்கிட்டுள்ளது வியக்க வைக்கிறது.
இந்த புதினத்தில் வைரமுத்து கூறும் நாட்டுப்புற மருத்துவத்தை அலசியுள்ளார் முனைவர் வே.தனுஜா. கள்ளிக்காட்டு இதிகாசமும் புலம்பெயர் தமிழர்களும் என்ற தலைப்பிலான கட்டுரையில், புதினம் முன்வைக்கும் செய்தி, மலேஷியாவுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்களிடையே இருந்த ஜாதி உணர்வுகளில் ஒற்றுமையைக் காட்டுவதாக இருந்தாலும், ஜாதி கடுமை, கெடுபிடி மலேஷியாவில் பெரிதாக தலைதுாக்கவில்லை என்பதை நிகழ்வுகள் வழியாக விளக்கியுள்ளார், மலேஷிய பல்கலைக் கழகப்பேராசிரியர் முனைவர் மு.ராசேந்திரன். வைரமுத்து சிறுகதைகளை ஆய்வு செய்துள்ள முன்னாள் துணைவேந்தர் முனைவர் ம.திருமலை, பெரும்பாலான கதைகள் ஜெயகாந்தன், கு.ப.ராஜகோபாலன் படைப்புகளுடன் ஒப்பிடத்தக்கவை என்று குறிப்பிட்டுள்ளார்.
வைரமுத்து சிறுகதைகளில் லியோ டால்ஸ்ஸ்டாய், தாஸ்தயெவ்ஸ்கி, ஆண்டன் செகாவ், மாப்பசான் போன்ற மகத்தான எழுத்தாளர்கள் சாயல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார் முனைவர் ஜெ.குணசீலி. திரையிசைப் பாடல்கள் பகுதியில், தொல்காப்பியர் காலத்தில் துவங்கிய இசை மரபு, பரிபாடல், குறிஞ்சிப்பாட்டு, சிலம்பு, தேவாரம், பிரபந்தம் என வந்ததை குறிப்பிட்டுள்ளார் ஆய்வாளர் ந.முருகேசபாண்டியன். பின், அது கர்நாடக இசை,- தமிழிசை என செழித்து, எளிய மக்களின் உழவுப்பாட்டு, ஒப்பாடு, தாலாட்டு என பல வடிவங்களில் நின்று நிலவுவதை குறிப்பிட்டுள்ளார்.
தமிழாற்றுப்படை நுால் குறித்த கட்டுரையில் முனைவர் ம.ராசேந்திரன், சங்க இலக்கியப் பத்துப்பாட்டின் செம்பாதியாக உள்ள ஐந்து ஆற்றுப்படைகளில் துவங்கி, புலவர் ஆற்றுப்படை, இறையனார் ஆற்றுப்படை, மாணாக்கர் ஆற்றுப்படை என இதுவரை வெளியாகியுள்ள அனைத்து ஆற்றுப்படை நுால்கள் குறித்தும் குறிப்பிட்டு, ‘அவையெல்லாம் பாடல் வடிவில் அமைந்தவை; வைரமுத்துவின் தமிழாற்றுப்படை கவிநடையில் உரையாக அமைந்துள்ளது என சுட்டிக்காட்டி, தமிழ் இலக்கிய வளத்துக்கு புதிய வரவு என்பதை குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் ப.மருதநாயகம் வழங்கியுள்ள அணிந்துரை, ஆய்வுரை போல் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வாழும் காலத்தில் அறிவுலகத்தால் இதுபோல் கொண்டாடப்பட்ட கவிஞர்கள் குறைவு; அதில் உயர்ந்து நிற்கிறார் வைரமுத்து. மொத்தமாக வைரமுத்தியம் நுாலை வாசிக்கும் போது, உலகப் படைப்பாளிகளில் ஒருவராக வைரமுத்து திகழ்வதாக பெருமித உணர்வு ஏற்படுகிறது. இது உண்மை; வெறும் புகழ்ச்சி இல்லை.
– ராஜ்கண்ணன்