நாட்டு நடப்புகளை அலசி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். இதழாளர் அந்துமணி, அரசில் உயர் அதிகார பொறுப்பு வகித்த இறையன்பு போன்ற பிரபலங்களின் மேன்மையான செயல்பாடுகளை, நேரடி அனுபவம் வழியாக வெளிப்படுத்துகிறது.
வாழ்வில் கற்றதும், பெற்றதும் இயல்பு மாறாமல் இந்த புத்தகத்தில் பதிவு செய்துள்ளார் எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ். தகுதியானவர்களை அடையாளம் கண்டு, நெருக்கமாகி அன்பை சம்பாதித்த விதம் குறித்து நன்றி பெருக்குடன் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுஉள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளில் வேலைக்கு செல்வோரின் நிலையை துல்லியமாக படம் பிடித்து காட்டுகிறது, ‘அரபு நாடுகளில் வேலை’ என்ற கட்டுரை. வெளிநாட்டில் வேலைக்கு செல்ல விரும்புவோர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், விழிப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியம், சில நாடுகளில் பின்பற்றப்படும் சட்ட விதிமுறைகள் குறித்து தெளிவான விபரங்களை எச்சரிக்கும் விதமாக தருகிறது.
விதிகளை பின்பற்றாமல் செல்வோருக்கு ஏற்படும் அவஸ்தைகளை அனுபவம் வழியாக விவரிக்கிறது.
தமிழகத்தில் சினிமா ரசிகர்கள், அரசியல் கட்சி தொண்டர்களின் மனப்பான்மை எவ்வளவு பின்தங்கி உள்ளது என்பதையும் விவரிக்கிறது. இதுபோன்ற உணர்வு பெருக்கு, இளைஞர்கள் வாழ்வில் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. படிப்பினை தரும் வகையில் உள்ளது.
ஆங்காங்கு பல்வகை சேவைப்பணிகளில் ஈடுபட்டுள்ளோரை அடையாளம் காட்டும் வகையில் சில கட்டுரைகள் உள்ளன. தனிமனிதர்கள் உழைப்பால் சமூகத்தில் பெருஞ்செயல்கள் நடப்பதை பெருமிதத்துடன் குறிப்பிட்டு பெருமைப்படுத்துகிறது. வாழ்வுப் பாடங்கள் கற்றுத்தரும் பல வண்ணக் கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
– மதி