முகப்பு » சமயம் » திருப்போரூர்ச்

திருப்போரூர்ச் சந்நிதி முறை

விலைரூ.350

ஆசிரியர் : பி.ரா.நடராசன்

வெளியீடு: சங்கர் பதிப்பகம்

பகுதி: சமயம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
கடந்த, 200 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சிறந்த இலக்கணப் புலவர், சிதம்பர சுவாமிகள். மதுரையிலிருந்து முருகன் திருவருளால், திருப்போரூர் வந்தார். புதைந்திருந்த சுயம்பு முருகனுக்கு, வியந்து போகுமளவு கற்கோவில் கட்டினார். ‘திருப்போரூர் சந்நிதி முறை’ எனும் சொற்கோவிலும் படைத்தார். இவரது உரையால்  தான், திருஞானசம்பந்தர் பாடல் திருக்கடைக்காப்பு, அப்பர் பாடியது தேவாரம், சுந்தரர் பாடியது திருப்பாட்டு என்று வகைப்படுத்தப்பட்டது.
இத்தகு அருட்புலவரின் புதிய பக்தி வேண்டுகோள் பாடலான சந்நிதி முறைக்கு, சிறப்பான உரைவிளக்கம் வெளிவந்துள்ளது. 18 தலைப்புகளில், 715 பாடல்களுக்கு விளக்கமும், மேற்கோளும் இந்த நூலில் விரிவாகத் தரப்பட்டுள்ளன. கண் பார்வை இழந்து, இந்நூலுக்கு உரை தர வேண்டுமென்றே, முருகனின் அருட்பார்வையால் மீண்டும் பார்வை பெற்று,  இந்நூலுக்கு உரை எழுதியுள்ள நூலாசிரியரின் முன்னுரை, பரவசம் கொள்ளச் செய்கிறது.
திருப்போரூர் முருகனின் தனிச் சிறப்பே, பிழை பொறுத்துக் கருணை காட்டுவது தான். ‘பெரும்பிழையை நீயே பொறுத்து’ (பா.4); ‘ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கு இரங்கித் தீது புரியாத தெய்வமே!’ (பா.32); ‘நாயினேன் செய்பிழைகள் நாடாது’ (பா.233).
‘ஓதி உணர்ந்தும் பிறர் தமக்கு உரைத்தும், தானடங்காப் பேதையின் பேதையார் இல்’ எனும், திருக்குறளை (834) தன் பாடலில் (411) அப்படியே காட்டியுள்ளதை, உரையாசிரியர் சிறப்பாக குறிப்பிட்டுள்ளார். திருவாசகத்தைப் போல் குயில்பத்து, அடைக்கலப்பத்து இவரும் பாடியுள்ளார்.
நூலில் மாறான சில தகவல்கள் தரப்பட்டுள்ளன. பாம்பன்  சுவாமிகள் பாடல்கள், 6,444 (பக்.16) இல்லை; 6,666 என்பதே சரியானது. திருத்தணி  திருப்புகழ்த் திருப்படித் திருவிழாவை டி.எம்.கிருஷ்ணசாமி ஐயர் துவக்கினார் (பக்.19). வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள், 1918, ஜனவரி 1ல், இதை துவங்கி வைத்தார். வரும் பதிப்புகளில் இந்தத் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.
இரண்டு ஆண்டுகளாகப் பொய்த்த மழையை, ‘பசியால் உயிர் தவியாமல் கனமழை தந்து’ (பக்.247) என்று, 10 பாடல்கள் பாடி மழை பொழிய வைத்தார். பாடல் பாடி நோய்கள் தீர வைத்தார். நாம் படிக்க பாடல்களும், துதிக்க ஆலயமும் தந்த திருப்போரூர் சுவாமிகளின் இந்த நூல், பக்தி ஆவணமாகும்.
முனைவர் மா.கி.இரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us