தெய்வத்தோடு தொடர்புடையது தமிழ். தெய்வம் அடியெடுத்துக் கொடுக்க, அதையே முதலாக (செய்யுள் தொடக்கமாக) வைத்து அடியார்களாகிய புலவர்கள் பாடினர். பாம்பு கடித்து, இறந்தவர்களை, இறைவனைப் பாடி நஞ்சினைப் போக்கி உயிர் பிழைக்கச் செய்தனர் என நூல்களால் அறிகிறோம். தெய்வத் தமிழின் அருளாற்றலே (மகிமையே) அதற்குக் காரணம். அப்படிப் பாடியவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் முதலிய இறையருளாளர்கள் என்பதை அறிவோம்.
முருகப் பெருமானே அகத்தியருக்குத் தமிழைக் கற்பித்து, அந்தத் தெய்வத் தமிழை தென்னாட்டில் பரப்புமாறு ஆணையிட்டார். குமரகுருபரர், அருணாகிரிநாதர் முதலியோர் இறையருளால் பாடிப் புகழ் பெற்றவர்கள்.
பாண்டிய மன்னனின் வெப்பு நோயைப் போக்கிய, ‘மந்திரமாவது நீறு’ எனத் துவங்கும் தேவாரப் பாடலைத் திருஞானசம்பந்தர் பாடி, மக்களை வியப்பில் ஆழ்த்தினார். ஆற்றில் போட்டபோது, எதிர்த்து வந்து கரை ஏறின. காளியின் அருள் பெற்று, கம்பர் பாடல்கள் பாடி, நிகழ்த்திய அருஞ்செயல்கள் இந்நூலில் விவரிக்கப் பெற்றுள்ளன.
நூல் முழுவதும் தெய்வத் தமிழ் மணம் கமழ்கிறது. பக்தியின் சிறப்பையும், தமிழின் தெய்வத் தன்மையையும் உணர்ந்து கொள்ள உதவும் நல்ல நூல். மீண்டும் படிக்கத் தூண்டும் நல்ல நூல்.
– பேரா., ம.நா.சந்தானகிருஷ்ணன்