மாணவ – மாணவியரோடு செலவிடும் கொடுப்பினை, ஆசிரியர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும். அவர்களின் உளவியல் அனுபவங்களை, ஒரு ஆசிரியரால் தான் உள்வாங்க முடியும். அரசு பள்ளி ஆசிரியராக பணி புரிந்து, மாணவர்களின் வாழ்வியலை உள்வாங்கி, கட்டுரை தொகுப்பாக வெளியிட்டுள்ளார்.
‘என்ன சிரிப்பு வேண்டியிருக்கு..’ என துவங்கி, ‘அவன விட்ருங்க பாஸ்..’ என முடியும், 17 கட்டுரைகள் முழுதும் சேட்டைகள் தான். கட்டுரைகள் பள்ளி காலத்திற்கு இழுத்துச் செல்கின்றன. பழைய இலக்கியம் முதல், நவீன இலக்கியம் வரை வாசித்த அனுபவம், ஆசிரியருக்கு இருப்பதை, எழுத்து நடை காட்டுகிறது.
மாணவன், ‘விஸ்பர்ன்னு ஒரு விளம்பரம் போடுறாங்களே, அது எதுக்கு சார்...?’ என்ற கேள்விக்கு, ‘இது உனக்கு தேவையில்லாத கேள்வி. பாடத்தை மட்டும் மனப்பாடம் செய்’ என கூறுவதை தவிர்த்து, புரியும் வகையில் விளக்குகிறார் ஆசிரியர்.
அனுபவங்களை எழுத துடிப்பவர்கள், வாசிக்க வேண்டிய நுால் இது.
– டி.எஸ்.ராயன்