தீமைக்கும், அன்பிற்குமான போரில் அன்பே வெற்றியை நிலைநாட்டும் என்பதை விளக்கும் அற்புதமான கதை. மொத்தக் கதையும் ஒரு முதியோர் இல்லத்தில் நடக்கிறது. நாயகன் சேது, நாயகி ஸ்வேதா அழகாகச் செதுக்கப்பட்ட பாத்திரங்கள்.
இவ்வுலகில் அன்பு தான் நிஜம், மற்றதெல்லாம் மாயை என்று முழங்குகிறது. முதியோர் இல்லங்களைப் பற்றிய சரியான பார்வையை எளிமையான வார்த்தைகளில் தந்தது அருமை. முதியோர் இல்லம், ஆதரவற்றோருக்கான அனாதை இல்லம் அல்ல; இளமையில் ஓடி களைத்த நதிகள், ஓய்வுக்காலத்தில் அன்பைப் பரிமாறிக்கொள்ள சங்கமிக்கும் புனித கடல் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
பேராசிரியர் தங்கராஜ் இரண்டு சிறுவர்கள்மீது காட்டிய கருணை, பின்னாளில் பன்மடங்காக பெருகி காக்கிறது என்பதைச் சொன்ன விதம் பாராட்டுக்குரியது. பாலியல் தொழிலில் இருந்த ஜெயாம்மாவின் பாத்திரம் வித்தியாசமான படைப்பு. எடுத்த புத்தகத்தைக் கீழே வைக்கவிடாத விறுவிறுப்பு மற்றொரு சிறப்பம்சம்.
– செல்வி நேத்ரா