இறைவன் மனிதனுக்கு எழுதிய காதல் கடிதம் தான் கீதை. கீதையின் சாரம் அன்பு தான் என்பதை நிலைநாட்ட எழுதப்பட்ட நுால் தான், கண்ணன் என்னும் காதல் தெய்வம். கடவுளாகிய கண்ணன் நம்மை நெருங்கி வந்து முத்தம் கொடுப்பது தான் பகவத் கீதை என்னும் இந்த அரிய பொக்கிஷம். பகவத் கீதைக்குத் தமிழில், ‘கண்ணனின் முத்தம்’ என்று தான் தலைப்பு வைக்க வேண்டும் என்கிறார் வரலொட்டி ரெங்கசாமி.
இந்தக் கருத்தை வலியுறுத்தும் வகையில் பல கற்பனை கதைகளையும், நிகழ்வுகளையும் விவரித்திருப்பது ஆசிரியரின் கைவண்ணத்திற்கு எடுத்துக்காட்டு. சரி, இந்த பகவத் கீதை சொல்வது, ‘கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே’ என்று தான் பலரும் சொல்வர்.
இன்னும் கொஞ்சம் ஆழமாக இறங்கிப் பார்த்தால் தான் கீதையின் சாரம் தெரியும். தன்னலம் கருதாத துாய்மையான அன்பு. அந்த அன்பின் வெளிப்பாடு தான் உண்மையான வழிபாடு. நம் மேல் வெறித்தனமாக காதல் கொண்டிருக்கும் ஒரு அன்பு தெய்வம் சொல்கிறது, ‘நீ எதுவும் செய்ய வேண்டாம்; என்னிடம் வந்தால் போதும் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று, அந்தத் தெய்வமே பறைசாற்றிய பகவத் கீதையின் சாராம்சம் அன்பாகத்தானே இருக்க முடியும்.
தன்னை மறுக்கும் நாத்திகருக்கும், பழிக்கும் பகுத்தறிவுவாதிக்கும் அருளைப் பொழியும் அன்பின் வடிவம் இறைவன். அந்த அன்பு காலகாலத்திற்கும் நிரந்தரமானது. குலத்தொழிலை கண்ணனே ஆதரிப்பதாக சிலர் கூறுவர். உண்மையில் கீதையில், நம் இயல்புக்கு ஏற்றாற்போல் ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதை முதலில் செய்யுங்கள் என்று தான் கண்ணன் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறான்.
இயல்புக்கு எதிரான வேலையில் ஈடுபட்டால், பின்னால் தீங்கு விளைவிக்கும் என்று கரிசனத்தோடு சொல்கிறான். இவ்வளவு அக்கறை கொண்ட கண்ணனை, காதல் தெய்வம் என்று அழைப்பதில் தவறில்லையே.
– இளங்கோவன்