உபதேசம், அறிவுரை போன்ற வறட்சியான விஷயங்களையும், தன்னுடைய வளமான கற்பனை திறமையால் விருப்பமான விஷயங்களாக மாற்ற முடியும் என்பதை வரலொட்டி ரெங்கசாமி, ‘கண்ணன் என்னும் காதல் தெய்வம்’ என்ற புத்தகத்தின் இரண்டாவது பாகத்தில் மீண்டும் நிலை நாட்டியுள்ளார்.
முதல் பாகத்தில், பகவத் கீதைக்கு, ‘கண்ணனின் முத்தம்’ என்று பெயர் வைக்கலாம் என கூறிய ஆசிரியர், இரண்டாம் பாகத்தில், ‘கண்ணனின் அன்பு’ என பெயர் சூட்டலாம் என்கிறார். அந்த அளவுக்கு கண்ணனின் காதலை அனுபவித்து எழுதியுள்ளார்.
பகவத் கீதையின் சாரம் காதல். இறைவன் மனித இனத்தின் மேல் வைத்திருக்கும் இணையற்ற காதல். அந்த அன்பு தான் ஆத்மா. அந்த அன்பு தான் பிரம்மம். அந்த அன்பு தான் ஆண்டவன். அன்பே சிவம். இவ்வுலகம் முழுதிலும் பரந்து நிற்கும் அன்பு அழிவற்றது. அன்பு கேடற்றது.
அன்பையழித்தல் யாருக்கும் இயலாது என்று கூறுகிறான் கண்ணன். யோகம் என்பது என்ன...
யோகம் என்பதை அதிர்ஷ்டம் என்று சிலர் கூறுவர். ஆனால், கண்ணனோ வித்தியாசமாக, ‘செய்யும் தொழிலில் காட்டும் திறமையே யோகம்’ என்கிறான். அவன் நம் மேல் உயிரையே வைத்திருந்து கீதையை உரைத்தான். வெற்றி, தோல்விகளை சமமாகக் கொள்ளும் மனோபாவமே யோகம் என்கிறான்.
‘இது, கடவுளாகிய என்னால் ஆக்கப்பட்ட நுால். எனவே இதன்படி நடக்க வேண்டும். இது என் கட்டளை’ என்று கீதையின் முடிவில் கண்ணன் சொல்லியிருக்கலாம். அப்படிச் சொல்ல அவனுக்கு உரிமை இருக்கிறது. என்றாலும், அந்த அன்பு தெய்வம் அப்படி சொல்லவில்லை.
‘நான் சொல்வதை சொல்லிவிட்டேனப்பா... அதைத் தீர யோசித்துப் பார்... பின், உன் மனதுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ அதைச் செய்’ என்றே முடிக்கிறான். பகவத் கீதையை பூஜை அறையிலிருந்து வெளியே எடுத்து வந்து, ஆன்மிக நாட்டம் கொண்டவர்களின் மனதிற்குள் ஏற்றுவதற்காக எழுதப்பட்ட புத்தகம் தான் இந்த ‘கண்ணன் என்னும் காதல் தெய்வம்’ என்றால் மிகையாகாது.
– இளங்கோவன்