முகப்பு » இலக்கியம் » பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்

பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்

விலைரூ.600

ஆசிரியர் : டாக்டர் உ.வே.சாமிநாதையர்

வெளியீடு: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்

பகுதி: இலக்கியம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தமிழ் இலங்கியப் பாரம்பரியத்தின் முதல் பத்து இலங்கியங்களாக குறிப்பிடப்படும் பெருமையைப் பெற்றவை, பத்துப்பாட்டில் இடம் பெற்றுள்ள நூல்கள்.
திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்னும் இந்த பத்து இலக்கியங்களும் உ.வே.சாமி நாதையரால், 1889ல் நச்சினார்க்கினியர் உரையுடன் பத்துப்பாட்டு என்னும் பெயரில் பதிப்பிக்கப்பட்டன.
இரண்டாம் பதிப்பும், மூன்றாம் பதிப்பும் உ.வே.சாமிநாதையர் எழுதிய முன்னுரையுடன் வெளிவந்துள்ளன. இப்போது வெளிவந்துள்ள இந்த எட்டாம் பதிப்பு, நாணயவியல் அறிஞர், ‘தினமலர்’ ஆசிரியர், தொல்காப்பியர் விருது பெற்ற டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களது நிதியுதவியுடன் வெளிவந்துள்ளது.
நாணயவியலில் பல புதிய ஒளிக் கீற்றுகளைப் பரப்பி வரும் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், தமிழ் இலக்கியத்திற்குப் பாய்ச்சும் ஒளிக்கீற்றுகளுள் இந்த நூலும் ஒன்று.
உ.வே.சாமிநாதையர் நூல் நிலைய வெளியீடுகளுக்குத் தொடர்ந்து பொருளுதவி வழங்குவதன் வாயிலாகத் தமிழ் அன்னைக்கு அணி சேர்க்கும் பணியைச் செய்து வருகிறார். பதினோர் ஏட்டுப்பிரதிகளைத் திரட்டி அவற்றை ஒப்பு நோக்கி இந்தப் பத்துப்பாட்டு நூலைப் பதிப்பித்துள்ளார் உ.வே.சாமிநாதையர்.
இந்த நூலைப் பதிப்பிக்கும்  போது, உ.வே.சா., எழுதியுள்ள அடிக்குறிப்பில், 166 தமிழ் நூல்களிலிருந்து அடிக்குறிப்புகளை வழங்கியுள்ளார். இவை தவிர தொல்காப்பியம், நன்னூல் ஆகியவற்றின் உரையாசிரியர் பலரையும் குறிப்பிட்டு உள்ளார்.
இந்தப் பத்துப்பாட்டு நூல்களையும், எட்டுப் புலவர்கள் படைத்து உள்ளனர். நக்கீரரும் (திருமுருகாற்றுப்படையும், நெடுநெல்வாடையும்), உருத்திரங்கண்ணனாரும் (பெரும்பாணாற்றுப்படையும், பட்டினப் பாலையும்),   ஒவ்வொருவரும் இரண்டு நூல் களைப் படைத்துள்ளனர்.
பத்துப்பாட்டுக்கு உரை வழங்கியுள்ள நச்சினார்க்கினியரை மதுரையாசிரியர் என்றும், பாரத்துவாசி என்றும் போற்றுகிறோம்.
மதுரையைச் சேர்ந்த இவர், ஆசிரியராக இருந்த காரணத்தால், மதுரை ஆசிரியர் என அழைக்கப்படுகிறார். நச்சினார்க்கினியர் உரை முடியும் இடத்தில், ‘பாரத்துவாசி நச்சினார்க்கினியர் உரை முற்றிற்று’ என்னும் குறிப்பு உள்ளதால் பாரத்துவாசி என்கிறாம்.
நச்சினார்க்கினியன் என்னும் பெயர் சிவனைக் குறிப்பதால், இவரைச் சைவ சமயத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடுகிறோம். இவர், தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை, குறுந்தொகையில் 20 பாடல்கள், சீவக சிந்தாமணி ஆகியவற்றிற்கு உரை எழுதியுள்ளார்.
‘உச்சிமேல் புலவர் கொள் நச்சினார்க்கினியர்’ என்னும் புகழ் மொழியால் நச்சினார்க்கினியரை புலவர்கள் அனைவரும் போற்றியுள்ளனர் என, அறிந்து கொள்ள முடிகிறது.
நச்சினார்க்கினியர் கூறியுள்ள உரை விளக்கத்திற்கு மேலும் விளக்கம் வழங்கும் வகையில், உ.வே.சாமிநாதையர் வழங்கியுள்ள உரை விளக்கம் ஒவ்வொன்றும் பதிப்பாசிரியரின் நுட்ப அறிவாற்றலுக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றன.
பெரும்பாணாற்றுப்படையில் மீனவர் குடியிருப்புப் பகுதி காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. அதை விளக்கிய நச்சினார்க்கினியர், ‘இது திமிலர் முதலியோரிருப்புக் கூறிற்று’ எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த விளக்கப் பகுதியில் திமிலர் என்பது, யாரைக் குறிக்கிறது என்பதை மேலும் விளக்க வேண்டிய தேவை உள்ளது.
இதை உணர்ந்த உ.வே.சா., திமிலர் என்னும் பெயர் மதுரைக் காஞ்சியில் வந்துள்ள தன்மையைக் கூறி, திமில் என்றால் மீன் படகு என்றும் உணர்த்தியுள்ள தன்மையைக் காண முடிகிறது.
நச்சினார்க்கினியர் வழங்கியுள்ள உரையைத் தொடர்ந்து உ.வே.சா., வழங்கியுள்ள தொடர் விளக்க உரையுடன், இந்த நூல் பத்துப்பாட்டு விருந்தாக அமைந்து உள்ளது. இந்த விருந்தினை வழங்கிய பத்துப்பாட்டில் மூல ஆசிரியர்களும், உரையாசிரியர் நச்சினார்க்கினியரும், பதிப்பாசிரியர் உ.வே.சாமிநாதையரும் என்றும் நினைக்கப்படுவர். இப்போது தமிழ் ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்த நூலை விரும்பி வாங்கி படித்து நம் பெருமைகளை அறியலாம்.
முகிலை இராசபாண்டியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

iPaper
சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us