முகப்பு » பெண்கள் » பெண்மை ஒரு வரம்

பெண்மை ஒரு வரம்

விலைரூ.120

ஆசிரியர் : பா.ஜோதி நிர்மலாசாமி, ஐ.ஏ.எஸ்.,

வெளியீடு: விஜயா பதிப்பகம்

பகுதி: பெண்கள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
பெண்கள் பற்றிய, 30 தலைப்புகளில் தம் வாழ்வியல் அனுபவங்களை இந்நுாலில் ஆழமாகப் பதிவு செய்துள்ளார் நுாலாசிரியர்.
பெண்கள் சமூகத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பல கோணங்களில் தம் வாழ்க்கைக்கு அனுபவங்களூடே விளக்கிச் சொல்கிறார்.
இன்றைய நடைமுறை வாழ்க்கையில் பெண்கள் தம் இருப்பைக் குடும்பச் சூழ்நிலையிலும், வெளியுலகிலும் எவ்வாறெல்லாம் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற நல்ல படிப்பினையைத் தருவதாக இந்நுால் விளங்குகிறது.
பெண் உரிமையை  நிலைநாட்ட வேண்டியதன் இன்றியமையாமை, கண்ணியம், பொறுப்புணர்ச்சி, எதையும் எதிர்கொள்ளும் திறம், குழந்தைகளை ஆரம்ப முதலே எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பதற்கான விளக்கங்களைத் தெளிவோடும், நடைமுறை அனுபவ வெளிப்பாட்டோடும், பட்டறிவுடனும், தக்க எடுத்துக்காட்டுகளோடு விளக்குகிறது இந்நுால்.
‘தான் இருக்கும் இடத்தில் தவறு இருக்கக் கூடாது என்பவளே அனைத்து நிலைகளிலும் தன்னை உயர்த்திக் கொண்ட, பெருமைக்குரிய பெண் ஆவாள்’ என்ற கருத்தோட்டத்தில் தம் கட்டுரை ஒவ்வொன்றிலும் பதிவு செய்துள்ளமை பாராட்டுக்குரியது.
அதிகாரத்தில் இருக்கும் பெண்களுக்கு இரக்கப் பண்பு இருக்க வேண்டும் என்பதைத் தாம் ஈடுபட்ட பொது வாழ்க்கையில் இருந்து சான்று காட்டுகிறார்.
‘ஒரு வீட்டின் நிர்வாகம் பெண்ணால் தான் நேர்த்தி அடைகிறது. குடும்பத்தின் பொருளாதார நிர்வாகம் அவள் கையில் இருந்தால், பூர்த்தியான வளமையோடு சேமிப்பும் நிகழ்கிறது’ என்ற கருத்தை ஆசிரியர் விதைத்திருப்பது, பெண்ணுக்குப் பெருமை சேர்ப்பதாக உள்ளது.
‘கூர்ந்து நோக்கி ஆய்ந்து அறிவதும், குறைவறத் தெரிந்து நிறை அறிவு பெறுவதும், பண்புகள் கொண்டு பயம்  நீக்கி இருப்பதும் பெண்களை முன்னிறுத்தும் மந்திரப் பண்புகளாம்’ என்று நுாலாசிரியர் சொல்லியிருக்கும் கருத்து, பாரதியின் புதுமைப் பெண்களை நினைவூட்டிச் செல்கிறது.
‘ஆராயவல்ல அறிவைப் பெறாத பெண்ணும், மண்ணால் செய்யப்பட்ட பொம்மையும் ஒன்று தான்’ என்ற கருத்தின் விளக்கமாக, புறத்தோற்ற அழகுக்காகப் பெண்கள் தங்களை அலங்காரம் செய்து கொள்வதை நளினமாக கண்டிக்கிறார்.
தங்கத்தில்  இருக்கும் மோகத்தைப் பெண்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில், ‘தேவையான அளவை விட அதிகமாகச் சேகரிப்பது களையப்பட வேண்டிய பழக்கமாகும்.
‘சேகரிப்பை வெளிக்காட்டி நகைக்கடையாக வலம் வருவது நகைப்புக்குரிய வழக்கமாகும். தங்கத்தால்  ஆன ஆபரணங்களால் அன்றித் தாம் பெற்ற அறிவால்  மிளிர வேண்டும்’ என்ற சிந்தனையை  வெளிப்படுத்துகிறார்.
வேலைக்குப் போகும் பெண்களின் ஊதியத்தைக் கணவன் சுரண்டுவது  குடும்பத்தில் களையப்பட வேண்டும் என்று கருத்துரைக்கும் ஆசிரியர், ‘நிதி குறித்த பொறுப்புகளை மகிழ்வுடன் பகிர்ந்து, பெண்ணும் நிர்வகிக்க வாய்ப்புகள் தருவது, அவளை நிறைமனம் கொண்ட திருமகளாக்கும்’ என்கிறார்.
பணி செய்யும் இடங்களில் பெண்கள் பாலியல் தொல்லைகள் நேராவண்ணம் பாதுகாப்பு உணர்வோடு இருக்க வேண்டும் என்பதைப் பொறுப்புணர்ச்சியோடு அணுகியுள்ளார். பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய நுால்.
ராம குருநாதன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

iPaper
சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us