முகப்பு » கட்டுரைகள் » பார்த்தது கேட்டது படித்தது! பாகம் – 15

பார்த்தது கேட்டது படித்தது! பாகம் – 15

விலைரூ.310

ஆசிரியர் : அந்துமணி

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
அன்புள்ள அந்துமணிக்கு,

‘தினமலர் – வாரமலர்’ இதழில் வெளியாகும் உங்கள் கருத்துகளை தொடர்ந்து வாசிக்கும் வாசக – வாசகியரில் நானும் ஒருவர். உங்கள் கருத்துகள் நேர்மையாக வாழ வேண்டும் என்ற உணர்வுடன், தன்னம்பிக்கையை வளர்க்கும் விதத்தில் அமைந்துள்ளன.

இப்படிப்பட்ட எழுத்துகளை பார்க்கவாவது முடிகிறதே என்ற சந்தோஷம் எனக்கு! ஏனென்றால், உண்மைக்கு, நேர்மைக்கு மதிப்பில்லாத காலம் இது.

கடினமான நேரங்களில் எல்லாம் மனதை தேற்றிக்கொள்ள முடிந்ததற்கு காரணம், தங்கள் எழுத்து தரும் தைரியம் தான்.

சிவகாசியில் இருந்து பேராசிரியை தமிழ்ச்செல்வி எழுதியுள்ள இந்த கடிதமே, ஏன் அந்துமணியின் எழுத்துகளை வாசிக்க வேண்டும் என்பதற்கு கட்டியம் கூறும்.

இதுவரை வந்துள்ள அந்துமணியின் பார்த்தது கேட்டது படித்தது பற்றிய, 14 புத்தகங்களில் இல்லாத அளவிற்கு இந்த, 15வது புத்தகம் முழுதும் நகைச்சுவை நிறைந்துள்ளது.

மொபைல் போன் வந்த போது, அதை வைத்திருந்த சிலர் செய்த அலட்டல்களை வாய் வலிக்க சிரிக்கும் அளவிற்கு விவரித்துள்ளார்.

அதிலும், நடிகை மீனா நீண்ட நேரம் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து, ஆல் சப்ஜெக்டுகளில் பேசிக்கொண்டு இருக்கும் போது, நிஜமாகவே அவருக்கு ஒரு கால் வர, அட... இவ்வளவு நேரம், பேசுவது போல் நடித்துக் கொண்டிருந்தாரா... என அனைவரும் கேலியுடன் பார்த்ததையும், அந்துமணியின் நண்பர் ஒருவரின் மனைவி, கடையில் வாங்கிய ஓவியத்தை தான் வரைந்ததாகக் கூறி, நண்பர் மூலம் உண்மை வெளிப்பட, அசடு வழிந்ததையும் படித்த போது, நம்மை அறியாமல் நம் இதழ்களும் நகைப்பில் விரிகின்றன!

கம்ப்யூட்டர் ஆணா, பெண்ணா என்று கம்ப்யூட்டர் கண்டுபிடித்தவர்களுக்கே எழாத கேள்வி ஒன்று, கல்லுாரி மாணவர் ஒருவருக்கு வந்துவிட்டது. அதற்கு, அந்த மாணவர்களே தந்த விளக்கத்தை அந்துமணி விவரித்திருப்பார் பாருங்கள்... செம நகைச்சுவை!

‘கம்ப்யூட்டர் ஒரு பெண்ணுக்கு தான் சமம்; காரணம், கம்ப்யூட்டரின் தொழில் நுட்பம் அதை உருவாக்கியவரை தவிர, வேறு யாருக்கும் புரிவதில்லை...’ என்று மாணவர்களும், அதற்கு பதிலடியாக மாணவியர் அளித்த பதில்களும் வெகு சுவாரஸ்யம்!

பணம், படிப்பு, குணம் நிறைந்திருந்தும் அந்துமணியின் நண்பர் ஒருவர், தான் காதலித்த பெண்கள் எல்லாம் சில மாதங்களிலேயே துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடுவதன் ரகசியம் தெரியாமல் தவித்துள்ளார். பின்பு, ஒரு வெள்ளைக்கார பெண்மணியின் மூலம் அறிவுக்கண் திறந்து, தன் குறையை அறிந்துள்ளார்... ஏன் காதலித்த பெண்கள் எல்லாம் அவரை கைகழுவினர் என்பதையும், எப்படி தன் குறையை அறிந்து கொண்டார் என்பதையும், ‘காதல் நமக்கெல்லாம் செட் ஆக மாட்டேங்குதுப்பா...’ என ஏங்கும் இளைஞர்கள், அவசியம் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்!

இந்த சமூகத்திற்கு, சிறு துரும்பை எடுத்து போடுபவரைக் கூட கொண்டாடும் அந்துமணி, ஊரில் உள்ள குளங்களை எல்லாம் சுத்தம் செய்யும் கோவை – சிறுதுளி அமைப்பையும், அதன் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகனையும் பற்றி எழுதாமல் இருப்பாரா... அவரது அமைப்பின் செயல்பாடுகளை விலாவாரியாக விளக்கியதோடு, இப்படி ஊருக்கு ஊர் பலர் கிளம்பி வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறார்.

அந்துமணியின் எழுத்துகளில் தவறாது ராணுவத்தினரின் கடமையும், வீரமும் எப்போதும் இடம் பெற்று விடும். இந்த புத்தகத்தில், இதுவரை நாம் அறிந்திராத ஜெனரல் சவுத்ரியின் வீர தீரம் பற்றி விளக்கியுள்ளார். காஷ்மீருக்குள் கால்பதித்த பாகிஸ்தான் படையை எப்படி விரட்டி சுருட்டி அனுப்பினார் சவுத்ரி என்பதை படித்த போது, மெய்சிலிர்த்தது!

ஆண்கள் எந்த எந்த வயதில் எப்படி இருக்க வேண்டும் என்று, ஆண்கள் குறித்த பெண்களின் மாறுபட்ட விருப்பம் மற்றும் எதிர்பார்ப்பு பற்றிய சுவாரஸ்யமான ஆய்வை வெளியிட்டுள்ள அந்துமணி, அது பற்றி, தன் வாசகர்கள் சென்னை சாயி சுப்பிரமணியன், மதுரை ராமய்யர், சென்னை ராமன் ஆகியோரிடம் கருத்து கேட்டிருந்தார்.

அடுத்த வாரமே சம்பந்தப்பட்ட மூன்று வாசகர்களும், தங்கள் குடும்ப படங்களை அனுப்பி, தங்கள் கருத்துகளையும் சுவைபட எழுதி அனுப்பியிருந்தனர்.

அக்கடிதங்களை படித்த போது, அந்துமணிக்கும், அவர் வாசகர்களுக்கும் உள்ள நெருக்கத்தை நினைத்து, ஆச்சர்யம் மேலோங்குகிறது.

சரி... அது சரி, எந்த எந்த வயதில் ஆண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகின்றனர் என்ற அந்த உருப்படியான விஷயத்தை நீங்களும் அறிந்து கொள்ள விரும்பினால், புத்தகம் வாங்கி படிப்பது தான் அதற்கான ஒரே வழி!

இது, அந்துமணியின் பார்த்தது கேட்டது படித்தது புத்தகத்தின், 15வது தொகுப்பாகும்; இத்தனை தொகுப்புகளில் இல்லாத ஒரு ரகசியத்தை இந்த புத்தகத்தில் சொல்லியிருக்கிறார் அந்துமணி.

அது, தான் எப்படி கேள்வி – பதில் எழுதும் இடத்திற்கு வந்தேன் என்பது தான் அந்த விஷயம். அவர் இந்த, ‘கேள்வி – பதில்’ களத்திற்குள் வந்ததும், கேள்விகள் குளத்தில் குதித்ததும், பதில்களால் பாராட்டு பெற்றதுமான வரலாறு, எழுத்தில் சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை தருவதாகும்!

அந்துமணியின் எழுத்தில் தன் பெயர் வராதா என பலர் ஏங்கியிருக்க, இந்த புத்தகத்தில் ஒன்றுக்கு இரண்டு இடத்தில் என் பெயரையும், நான் எடுத்த படங்களையும் பிரசுரித்து, எனக்கு மிகப் பெரிய பெருமையை சேர்த்துள்ளார்; உண்மையிலேயே இதயம் இனிக்கிறது; கண்கள் பனிக்கின்றன.

ராமாயணத்தை தமிழில் எழுதியது யார் என்று கேட்டால் சொல்லி விடுவீர்கள்; ஆனால், தெலுங்கில் எழுதியது யார் என்பது தெரியுமா? அவர் ஒரு பெண் புலவர்; அதுவும் சைவ நெறியில் பிறந்தவர். அவரைப் பற்றிய குறிப்புகள் அசர வைக்கின்றன.

இந்திரா காந்தி முதல், இன்றைய ராகுல் வரையிலானவர்களின் பெயர்களை படித்துவிட்டு, இவர்கள் ஏதோ காந்திக்கு ரத்த சம்பந்தம் உள்ளவர்கள் என, பாமர மக்கள் நினைப்பதுண்டு.

ஆனால், காந்திக்கும், நேரு குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி, எப்படி நேரு வம்சத்தைச் சேர்ந்த இந்திரா குடும்பத்திற்கு, காந்தி என்ற பெயர் வந்தது என்பதை அந்துமணி விளக்கியுள்ளதை அனைவரும் அவசியம் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். அதே போல புறாவின் காலில் கட்டிவிடும் செய்தி, எப்படி சரியாகப் போய் சேருகிறது என்பதற்கான அறிவியல் விளக்கமும் ஜோர்!

பாரதியைப் பற்றி பலர் எழுதியுள்ளனர்; இதில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., பாரதியைப் பற்றி எழுதியுள்ள விஷயம் முற்றிலும் புதியது. அதேபோன்று, அரசியல்வாதி எப்படி ஆட்சி செலுத்த வேண்டும் என்பதற்கு காமராஜர் குறித்த செய்தியை படித்த போது, இன்றைய அரசியல் நிலைமையை எண்ணி பெருமூச்சு வருகிறது.

புத்தகம் முழுதும் ஏராளமான தகவல்களுடன், பல தன்னம்பிக்கை கதைகளும், வாசகர்களின் வாழ்வியல் அனுபவங்களும் கொட்டிக் கிடக்கின்றன. படிக்க ஆரம்பித்தால், முடிக்காமல் கீழே வைக்க மாட்டீர்கள்... அந்த அளவுக்கு இப்புத்தகம் சுவாரஸ்யமான தகவல் சுரங்கம்!

– எல்.முருகராஜ்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us