முகப்பு » கட்டுரைகள் » பார்த்தது கேட்டது படித்தது! (பாகம் – 16)

பார்த்தது கேட்டது படித்தது! (பாகம் – 16)

விலைரூ.290

ஆசிரியர் : அந்துமணி

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
அன்புள்ள அந்துமணி அவர்களுக்கு...

சமுதாயத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகளை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உங்கள் பணி தொடர்வது பாராட்டுக்குரியது!

அந்த வகையில் என்னைப் போன்ற படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஏமாற்றும் போலியான, ‘கன்சல்டன்சி’ நிறுவனங்கள் பற்றி தங்கள் மூலம் இளைஞர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன் என்று ஓர் இளைஞர், அந்த போலி நிறுவனம் பற்றி அந்துமணிக்கு விரிவான கடிதம் எழுதுகிறார்.

இப்படி பல ஆயிரக்கணக்கான வாசகர்கள் தங்களை பாதித்த பிரச்னைகள், மற்றவர்களை பாதித்துவிடக்கூடாது என்பதற்கான கருவியாக, அதைத் தடுக்கும் ஆற்றல் மிக்கவராக அந்துமணியை கருதி, அவரிடம் தங்கள் பாரத்தை, கவலையை, நம்பிக்கையுடன் இறக்கி வைக்கின்றனர்.

அந்த நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக, அவரும் எழுத்தில் மட்டுமின்றி, களத்திலும் இறங்கி சடுதியில் பிரச்னையை களைகிறார். காரணம், வாசகர்களே தன் முதலாளிகள் என்று அவர் கருதுவதால்! அதை, இந்த புத்தகத்தின் பல இடங்களில் சுட்டிக் காட்டியும் உள்ளார். இன்று வரை அதில் இருந்து இம்மியும் பிசகாமல் இருந்தும் வருகிறார்.

எப்போதுமே மருந்து கசக்கும்; ஆனால், அது தான் நன்மை செய்யும். அது போலத் தான் ‘தினமலர்’ நாளிதழும்! உண்மையான களநிலவரத்தை சொல்லும் போது, சம்பந்தப்பட்டவர்களுக்கு கசக்கத் தான் செய்யும்; ஆனால், கொஞ்ச நாளில் உண்மையின் தன்மை உணர்ந்து ‘தினமலர்’ நாளிதழை பாராட்டுவர். இது தொன்று தொட்டு வருவது தான்.

ஆசிரியர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அரசுக்கு தங்கள் கோரிக்கையை சொல்வதற்கான மேடையாக தினமலர் நாளிதழ் அதிகம் பயன்படும். காரணம், கோரிக்கை வைப்பவர்களுக்கு தெரியும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவருமே தினமலர் நாளிதழ் தவறாமல் படிப்பர் என்று!

ஆனால், அதே நேரம் அவர்கள் தங்கள் கடமையில் இருந்து வழுவினால், அதாவது, மருத்துவர்கள் நோயாளிகளை கவனிக்காமல் போராடினாலோ, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் போராடினாலோ, அரசு ஊழியர்கள் தங்களை கடமையைச் செய்யாமல் போராடினாலோ, அதையும் தினமலர் மட்டுமே கண்டிக்கும். இதை, ஒரு சம்பவம் மூலமாக அந்துமணி அருமையாக விளக்குகிறார்.

விடலைப்பருவ மாணவியரை எப்படி போதை மாத்திரை கொடுத்து பழக்கி, பாழாக்குகின்றனர் என்ற விஷயத்தை படித்ததும் மனம் பதறிப் போனது. பெண் பிள்ளைகளை படிக்க வைக்கும் பெற்றோர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.

இப்புத்தகத்தில் நிறைய நீதிக் கதைகள் சொல்லியிருக்கிறார்; சதி செய்பவன் அதே போன்ற சதியில் மாட்டிக் கொள்வான் என்ற நீதியை முன்வைத்து சொன்ன, ‘நாவிதர்கதை’ இது வரை யாரும் சொல்லாதது; எங்கேயும் படிக்காதது; வெகு சுவாரஸ்யம்!

வெளிநாட்டு பயண செய்தி என்றால், அந்துமணிக்கு அல்வா சாப்பிடுவது போல! அவ்வளவு இனிமையாக, எளிமையாக கொடுப்பார். இந்த புத்தகத்தில் இலங்கை பயண செய்தியை கொடுத்துள்ளார்; அதில் ஒரு புதுமையையும் செய்துள்ளார்.

அது, ‘தான் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து, காற்றை நன்கு உள்ளிழுத்து சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின், கூப்பிடு தொலைவில் இருந்த டீ கடைக்கு நகர்ந்தேன்...’ என்பது போன்ற இழுவையான, இதர பயண எழுத்தாளர்கள் போல அல்லாது, வாசகர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும், ‘டிட் பிட்ஸ்’ போல தொகுத்து தந்துள்ளார்.

இன்றைக்கு சேனல்கள் அனைத்தும் போட்டி போட்டு ஒளிபரப்பும், ‘விரைவுச் செய்திகளுக்கான’ அச்சாரம், அந்துமணியின் இந்த சுருங்கச் சொல்லும் செய்திகள் தான் என்பதில் இரண்டாவது கருத்து கிடையாது.

அதே போல மாணவன், ஆசிரியர், மாணவி மற்றும் தாய் ஆகியோர் பயணம் செய்த ரயில், ஒரு குகைக்குள் நுழைந்த போது கன்னத்தில் அறை வாங்கும், ‘பளார்’ ஒலியும், பின், ரயில் குகையை விட்டு வெளியே வந்தபோது நடந்த சம்பவத்தையும் மையப்படுத்தி, இன்றைக்கும் நிறைய நகைச்சுவை கதைகள் பின்னப்படுகின்றன.

ஆனால், இந்த கதைகளுக்கு மூலம் நம் அந்துமணி தான் என்பதை இந்த புத்தகம் நிரூபணம் செய்கிறது. இதே போல நிறைய நகைச்சுவை விஷயங்களை எழுதி வாசகர்களை சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கிறார்.

போலி சாமியார், போலி ஜோதிடர் போன்றவர்களை தோலுரிப்பது என்பது அந்துமணிக்கு கைவந்த கலை. அவர்கள் செய்த சில்மிஷங்களை எல்லாம் விலாவாரியாக எழுதி, வாசகர்களை மட்டுமின்றி போலிகளையும் எச்சரிக்கை செய்கிறார்.

அமெரிக்க மாப்பிள்ளை என்றால், பெற்றவர்கள் கண்ணை மூடிக்கொண்டு தங்கள் பெண்ணை மணமுடித்துக் கொடுத்துவிட்டு படும் அவஸ்தையை, பல்வேறு உண்மை சம்பவங்களுடன் எடுத்துச் சொல்லி, பெண்ணைப் பெற்றவர்களை மட்டுமின்றி, மண வயதில் உள்ள பெண்களையும் ஜாக்கிரதையாக இருக்கச் சொல்கிறார்.

பத்திரிகை படிக்கும் பலருக்கும், பத்திரிகை எப்படி அச்சாகிறது என்பது தெரியாது; அவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக அருமையாக விளக்குகிறார்; அதே நேரம் வாசகர்களுக்கு தினமலர் நாளிதழை தரமாக கொடுக்க வேண்டும் என்பதற்காக வாங்கப்பட்ட புது மிஷின் பற்றியும் விவரிக்கிறார். இதழியல், அச்சுக்கலை பிரிவு படிக்கும் மாணவர்கள் அவசியம் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

மத்திய அரசின் பட்ஜெட் எப்படி தயாராகிறது என்பதை எழுதியிருக்கிறார். சாப்பிடும் தட்டில் பட்ஜெட் ரகசியத்தை கசியவிட்டு விடுவர் என்பதால், ஒரு முறை சாப்பிட்டு அழித்து விடும் தட்டைத் தான் உபயோகிப்பர்; பட்ஜெட் தயாரிக்கும் நாட்களில் உண்ணுவது, உறங்குவது எல்லாமே ஒரு வளாகத்திற்குள் தான் என்பது போன்ற ஆச்சரியமான தகவல்களை எல்லாம் சொல்லிவிட்டு, அதைவிட ஆச்சரியமாக, இதுவரை ஒரு முறை கூட பட்ஜெட் ரகசியம் கசிந்தது இல்லை என்ற தகவலையும் சொல்லி, பட்ஜெட் தயாரிப்பில் இருப்பவர்களை பாராட்டவும் செய்கிறார்.

தமிழை சுத்தமாக பேசுகிறோம் என்ற பெயரில் சோப்பை, ‘வழலைக்கட்டி’ என்று உச்சரிக்க கட்டாயப்படுத்தி, தமிழில் பேச நினைக்கும் குழந்தைகளை பயமுறுத்தாதீர்கள் என்று அரசியல்வாதிகளை கேட்டுக் கொள்கிறார்.

அவ்வைப் பாட்டிக்கு அடுத்தபடியாக, நெல்லிக்கனியின் குணாதிசயத்தை சொல்பவர் அந்துமணியாகத் தான் இருக்கும்; ஆயுர்வேத சிகிச்சையில் அது செய்யும் மாயத்தை சொல்லியுள்ளார். அது, ஹீமோகுளோபின் குறைபாடுள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவலாகும்.

வாசகர் ஒருவர் வேறு வழியின்றி தமிழ் சீரியல் பார்த்ததாகவும், அது இவ்வளவு தரம் தாழ்ந்து விட்டதே என்றும், மகாபாரதத்திற்கு ஒரு சகுனி தான், ராமாயணத்திற்கு ஒரு கூனி தான்; ஆனால், தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் வரும் எல்லா பாத்திரங்களுமே சகுனியாக, கூனியாகவே இருக்கின்றனர்; கொஞ்ச நாள், இத்தொடர்களை பார்த்தால் போதும்; நானும் மன நோயாளியாகி விடுவேன் என்று கண்ணீர் வடிக்கும் அவ்வாசகர், முத்தாய்ப்பாக ‘டிவி’யை நேரந்தின்னி பேய் என்றும் விவரிக்கிறார்.

உட்கார்ந்து சாப்பிட நேரமில்லாமல் நின்று கொண்டே சாப்பிடும் கலாசாரம் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில், உணவை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை, ‘ஆச்சாரக்கோவை’ என்ற புத்தகத்தில் இருந்து திரட்டி தந்துள்ளார், அந்துமணி. படிக்கும் போது தான் தெரிகிறது, உணவை உண்ணும் விதத்தில் எவ்வளவு தவறு இருக்கிறது என்று!

கடந்த 1789ல் துவங்கப்பட்ட பம்பாய் லைப்ரரியில், இந்தியர்கள் யாரும் உள்ளே நுழைய அனுமதியில்லை. அதை எப்படி படிப்படியாக உடைத்து, இன்று வீட்டிற்கு ஒரு நுாலகம் வைக்குமளவிற்கு நாம் முன்னேறி உள்ளோம் என்பதை நுாலக வரலாற்றின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. வாசிப்பை நேசிக்கும் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய தகவல். இது போன்ற அறிவு பூர்வமாக தகவல்கள் தருவதால் தான், வாசகர்கள் அந்துமணியை கொண்டாடுகின்றனர்.

நடிகை கே.ஆர்.விஜயாவின் கணவர்வேலாயுதம், தொழில் அதிபராக மாறுவதற்கு முன் பட்ட கஷ்ட நஷ்டங்களை திரட்டி தந்துள்ளார், அந்துமணி. தொழில் செய்து முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு பயனுள்ள தகவலாகும். அதே போல நகைச்சுவை நடிகர் சந்திரபாபு, வறுமையின் காரணமாக விஷம் குடித்து இறக்கும் தருவாய்க்கு சென்று மீண்ட கதையையும் இப்புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்.

பல காலமாக ஊடகங்களில் தலாய் லாமா என்பவரைப் பற்றி படித்திருக்கிறோம்; லாமா ஒருவரை கைத்தாங்கலாக அழைத்து வருவதை படமாகவும் பார்த்து இருக்கிறோம். ஆனால், இந்த தலாய் லாமாவிற்கு பின்னணியில் உள்ள படு சுவாரசியமான தகவலை, இந்த புத்தகத்தின் மூலமே தெரிந்து கொள்ள முடிகிறது.

இதோ இன்னும் சில நாளில் பள்ளிக்கூடங்கள் திறக்கப் போகின்றன; பள்ளிக்கூடங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை அழகாக விளக்குகிறார், ஆசிரியர் ஒருவர். பள்ளிப்பருவம் என்பது போட்டி போடும் இடமல்ல; அது ஓர் இனிமையான பயணம்; குழந்தைகள் விருப்பத்தோடு செல்லுமிடமாக பள்ளிகள் இருக்க வேண்டும். பிஞ்சு மனதை அன்பிற்கு ஏங்கவிடாமல் பாசமும், பரிவும் அளித்து போஷிக்கும் இடமாக இருக்க வேண்டும்.

வகுப்பறைகள் பாடங்களை மட்டுமின்றி நிஜ உலகையும் போதிக்க வேண்டும். ஒப்பீடு என்பது அறவே கூடாது; பள்ளிகள் என்பது இறைவனின் தோட்டம்; இங்கே குழந்தைகள் என்ற வண்ண மலர்கள் பூத்துக் குலுங்க வேண்டுமே தவிர, ஒரு போதும் வாடி விடக்கூடாது; வாட விடக்கூடாது என்று கூறும் அந்த ஆசிரியரின் எண்ண ஓட்டத்தை நமக்கு பகிர்ந்தளித்துள்ளார் அந்துமணி.

இளகிய மனமும், கருணையும், அன்பும், பாசமும் நிறைந்து வழியும் மனதில் தான் இத்தகைய எண்ணம் இருக்கும்; எழுத்தாய் மலரும்... அது, நம் அந்துமணியிடம் மட்டுமே வற்றாத சுனையாக இருக்கிறது!

– எல்.முருகராஜ்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us