பூங்கொடி பதிப்பகம், 14 சித்திரகுளம் மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை - 600 004, தொலைபேசி: 24643074.
பொழுதுபோக்கும் நூல்கள் பணத்தையும், காலத்தையும் கரைத்து விடும். தமிழின் இனிய
திறனாய்வுக் கட்டுரைகள் மனதை உயர்த்தி, குறிக் கோளை விதைத்து விடும்.
அமரர் வெ.சாமிநாத சர்மாவின் அற்புதக் கட்டுரைகள் தமிழருக்குப் பன்முகப் பார்வைகள் தந்தன. அவரது சீடரான அறிஞர் பெ.சு.மணியின் இந்த இரு நூல்களின் 40 கட்டுரைகளும், படிப்போருக்கு தமிழ், தேசியம், பக்தி, ஆங்கிலம் ஆகிய களங்களில் புதுப்புது கண்டுபிடிப்புகளைக் காட்டும்!
இந்து பத்திரிகை நிருபர் கேசவப் பிள்ளை, ஆங்கிலேயருக்கு எதிராக நடத்திய பத்திரிகைப் போர், அவரது சமூக நீதிப் போராட்டங்கள், தமிழ் ஆர்வம் ஆகியவை நூற்றாண்டு கொண்டாடிய அவரது நினைவைப் புதுப்பிக்கின்றன. இந்நூல்களில் இடம் பெற்றுள்ள அமுதத் தமிழின் தகவல் துளிகள் இதோ:
* 1923ல் காந்தி புராணம் 3 ஆயிரம் பாடல்களாலும், 1927ல் திலகர் மான்மியமும் தற்கால அவ்வையார் என்று போற்றப்படும் அசலாம்பிகை அம்மையார் எழுதி, திரு.வி.க., முகவுரையுடன் வெளிவந்தது.
* 1917ல் "பிரபஞ்ச மித்திரன்' இதழ் மூலம் தேசப் பக்தியைத் துணிச்சலுடன் வளர்த்தவர் டாக்டர் வரதராசுலு நாயுடு.
* ஆங்கிலேயரை விரட்ட வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் எழுதியது ஆங்கிலேயர் அந்தாதி.
* தன் வீடு அழிந்தாலும் நாடு நலம் பெற வேண்டி ஜெர்மன் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய பிரெஞ்சுப் புரட்சி வீரனை, புறநானூற்று வீரனோடு ஒப்பிட்டு எழுதிய வ.வே.சு., ஐயரின் சிறுகதை தேசபக்திக்கு இலக்கணமாகும்.
* ஈழத் தமிழறிஞர் விபுலாநந்தர், ஆன்மிகம், தமிழ் இரண்டின் வளர்ச்சிக்கு உதவியவர். இவர் யாழ் ஆய்வு யாவரும் போற்றத்தக்கது.
தமிழ் வளர்ச்சிப் பாதையின் பல்வேறு மைல்கற்களை உணர்த்தும் அருமையான ஆய்வு நூல் இது!