திருவரசு புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 312).
மூத்த எழுத்தாளரும் கதையாசிரியருமான ரா.கி.ர., "அண்ணா நகர் டைம்ஸ்' வார இதழில் எழுதி வந்த கட்டுரைகளைத் தொகுத்து நூல் வடிவம் தந்துள்ளார் பதிப்பாளர். இந்நூலில் "கொஞ்ச நேரம் திருப்பாவை' முதல் "அயர்லாந்தில் மனுநீதிச் சோழன்' முடிய 61 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
தமிழில் பட்டம் பெற்ற ஒருவரைத் தான் மாநிலக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியராக நியமிக்க வேண்டும். பொருளியல் பட்டம் பெற்ற தொ.பொ.மீ.,யை ராஜாஜி எப்படி நியமித்தார்? (பக்:7).
சென்னை நகரின் பல பகுதிகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள எக்ஸ்னோரா அமைப்புகள் எப்படி இயங்குகின்றன? (பக்.37).
திருடர்கள் கால் வைக்காத ÷க்ஷத்திரம் எது தெரியுமா? (பக்.91). நெல்சன் மண்டேலாவின் பெயரில் உள்ள நெல்சன் அவருடைய அசல் பெயரல்ல. அசல் பெயர் என்ன தெரியுமா? (பக்.107)
யாருக்கு, எப்படிக் கடிதம் எழுதினால் பலன் கிடைக்கும், தொழில் வெற்றிகரமாக நடைபெற எவ்வாறு கடிதம் எழுத வேண்டும் தெரியுமா? (பக்.124).
இப்படிப்பட்ட ஏராளமான வினாக்களுக்கு விடை அளிக்கும் வகையில் ஒவ்வொரு கட்டுரையையும் ஒரு புதிய யுக்தியில் அணுகி தன் அனுபவ ஞானத்தை வெளிப்படுத்தியுள்ளார் ரா.கி.ர.,