தமிழாக்கம்: நா.தர்மராஜன். வெளியீடு: சுரா புக்ஸ் (பிரைவேட்) லிமிடெட், 1620, ஜே-பிளாக், 16வது பிரதான சாலை, சென்னை-40. (பக்கம்: 160).
ஏசுநாதருடைய மலைப் பிரசங்கத்தைப் போல் காந்தி அடிகளின் அறிவும், அன்புணர்ச்சியும் நிறைந்த உபதேசங்கள் எண்ணற்ற நல்ல மனிதர்களுடைய இதயங்களைத் தொட்டிருக்கின்றன. (பக்.3) ரோமெய்ன் ரோலந்து வாசகமிது. "காந்தியின் இயல்பான, உளப்பூர்வமான குரல் என்னை ஈர்த்தது . ஏசுநாதர் விண்ணகத்தைப் பற்றிப் பேசும்போது இதே குரலில் தான் பேசியிருப்பார் என்று எனக்குத் தோன்றியது' (பக்.42) லூசியான் பிளாகாவின் பார்வையிது.
"நாங்கள் புரட்சிக்காரர்கள். ஆனால், நேரடியாக அல்லது மறைமுகமாக மகாத்மா காந்தியின் சீடர்கள் என்று ஹோ-சி-மின் கூறியது வியப்பல்ல. ஏனென்றால், காந்தி இந்திய மக்களிடம் அஞ்சாமையைப் போதித்தார்' (பக்.67) மகாத்மா பற்றி ஹிரென் முகர்ஜியின் கருத்து இது.
"காந்தி எந்தப் பதவியும் வகிக்கவில்லை. ஆனால், அவருடைய ஆணையை மக்கள் நிறைவேற்றினர். அரசியல் தந்திரங்கள் இல்லாமல் தனது ஆளுமையின் சக்தியினால் வெற்றி பெற்ற அரசியல் தலைவர் அவர். எப்பொழுதும் வன்முறையை நிராகரித்தவர். அடக்கமும் (பக்.93) ஞானமும் உள்ளவர்' அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வாக்குமூலம் இது.
இப்படிப் பல்வேறு அறிஞர்கள் காந்தியைப் பற்றி எழுதிய 22 கட்டுரைகள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. மீரா பென்னின் ஆன்மாவின் யாத்திரை, மார்ஜோரி சைக்கிள் காந்திய யாத்திரை வெகு சிறப்பாக உள்ளன. பேராசிரியர் தர்மராஜனின் இப்படைப்பு காந்திய இலக்கியத்திற்குப் பெருமை சேர்க்கும் புதிய வரவாகும்.