(இலக்கிய நயக் கட்டுரைகள்) ஆசிரியர்: டி.எஸ்.கோதண்டராமன், வெளியீடு: திருவரசு புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 280).
உயர் தனிச் செம்மொழிகளில் தமிழும், வடமொழி என்று கூறப்படும் சமஸ்கிருதம் பாரத நாட்டிற்கும் பெருமை சேர்க்கின்றன. இரண்டிலும் இலக்கியப் புதையல்களை எடுத்துக் கொண்டேயிருக்கலாம். இந்நூலில் 26 கட்டுரைகள் உள்ளன. "ஸ்ரீராமன் எப்போது பிறந்தான்' என்ற கட்டுரையின் முடிவில், "பிறப்பில்லாத ஒரு பரம்பொருளுக்கு பிறப்புச் சான்றிதழ் கேட்க, நாம் யார்?' என்று ஆசிரியர் கூறுவது சரியென்றே நாம் உணர்கிறோம். (பக்.46) தசரதன் கண்ணாடியில், தன் செவியோரம் நரையைக் கண்டதாகக் கூறி, ராமனுக்கு பட்டம் சூட்டுவேன் என்று கூறும் பகுதியில், காலதேவன், கண்ணாடி, நரை என்ற கற்பனை காளிதாசனுடையது என்றும், விற்பனை தன்னுடையது என்றும் நகைச்சுவை ததும்ப நூலாசிரியர் கூறி, நம்மை உவகை கொள்ளச் செய்கிறார். (பக்.101) இதுபோன்று ஒவ்வொரு கட்டுரையிலும் நகைச்
சுவையைக் கையாள்கிறார். நமது தெய்வங்களுக்குக் கத்தி, சூலம், கதை, சக்கரம், வில் போன்ற ஆயுதங்கள் ஏன் என்ற கேள்விக்கு, நூலாசிரியர், "அழகின் எல்லை' என்ற கட்டுரையில் கூறும் விளக்கம், நம்மை பரவசப்படுத்துகிறது. (பக்.118- 132)
திருமந்திரத்தில் மனிதநேயம் என்ற நூலின் இறுதிக் கட்டுரை, ஆசிரியரின் ஆராய்ச்சித் திறனை வெளிப்படுத்துகிறது. (பக்.250-270)
மொத்தத்தில் வடமொழி, தமிழ் ஆகிய இரு மொழிகளில் உள்ள இலக்கியக் காட்சிகளை, நமக்குப் பலாப் பழம் போல் உரித்து, நன்கு சுவைக்கச் செய்யும் அருமையான நூலிது.