நர்மதா பதிப்பகம், 10.நானா தெரு, (தி.நகர் அஞ்சலகம் அருகே) பாண்டி பஜார். தி.நகர். சென்னை -17. தொலைபேசி: 24334397. (பக்கம் 408; விலை ரூ.250)
இலக்கிய நீதிக் கதைகள், தேவதைக் கதைகள், பன்னாட்டு நீதிக் கதைகள், கர்ணபரம்பரை நீதிக் கதைகள், மரியாதை ராமன் கதைகள் என்று ஒவ்வொரு தலைப்பிலும் பத்துக் கதைகளாக மொத்தம் 50 கதைகள் உள்ளன. அதிலும் சிறப்பாக நீதியை விளக்கும் கதைகளாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது ஆசிரியரின் திறமைக்குச் சான்றாகும். காந்திஜியின் பொன்மொழிகள் எழுதிய ஆசிரியர் என்பதை அவர் காட்டும் எளிமையான நடையும். திருக்குறள் உட்பட அறநூல்களின் கருத்துக்களையும் சேர்த்தவிதம் அருமை. ஓவியக்கலைஞர் எம்.ஆர்.சதாசிவம் தன் தூரிகையால் கதைகளுக்கு உருக்கொடுத்திருக்கும் விதம் சிறப்பாக அமைந்திருக்கிறது. கடற்கன்னி கதையில் இத்தாலிய ஆண்ட்ரூஸீன் நாட்டுப்பற்றைப் படம் பிடித்தது ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல ஆகும். நாட்டுக்காக எதையும் இழக்கத் தயாராக வேண்டும் என்கிறது இக்கதையின் நீதி. இப்படி எல்லாக் கதைகளுமே சிறப்பாக தேர்வு செய்து நல்லதாளில் உருவாக்கப்பட்டிருக்கும் படைப்பு. சிறுவர்களுக்கு நல்ல சிந்தனை தரும் சிறந்த முயற்சிக்கு பாராட்டுதல்கள்.