சுரா புக்ஸ் 1620, `ஜெ` பிளாக், 16வது பிரதான சாலை, சென்னை-40 (பக்கம்: 128. விலை: ரூ.50).
`திராவிட நாட்டுக் கதைகள்' என்ற பெயரில் பண்டிதர் நடேச சாஸ்திரியார் பழங்காலத்தில் சிறுகதைகள் பல எழுதியுள்ளார். இந்தப் பழங்கதைகளைப் புதிதாக்கி மெருகூட்டித் தந்துள்ளார் இந்நூலின் தொகுப்பு ஆசிரியர். மரணத்தையும், மதிநுட்பத்தால் வெல்லலாம் என்ற முதல் கதையில் தொண்டை நாட்டு உலுத்தன் மிகவும் கஞ்சனாக இருந்தான். மூன்று மாத பூஜைக்குப் பின் பிரம்மராட்சதன் வருகிறான். இவனுக்கு வேலை தராவிட்டால் மிக ஆபத்து என்று பல வேலைகள் தந்தான். ஆனால், ராட்சதனை சமாளிக்க முடியாமல் அவன் தன் மனைவியிடம் அனுப்ப, அவளோ தன் தலைமுடி ஒன்றை நேராக்கி வருமாறு சொல்ல, தலைமுடியோடு ஓடிவிடுகிறான் ராட்சதன். முடியை நேராக்க முடியுமா?
தந்தையே தன் நான்கு மகள்களைத் திருமணம் செய்யத் துணிந்த விபரீத சிந்தனையை ஒரு கதை கூறி அதைத் தடுத்து நிறுத்தி, மதிவதனன் என்னும் இளவரசருக்கு திருமணம் செய்து கொடுப்பதை சிந்துபாத் கன்னித்தீவு போல் இழுவையாகச் சொல்லும் இழுபறி முறை இனிப்பாக இல்லை.
1.பெண்களைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பாதே. 2.பொருளின்றி வெளியே போகாதே! 3.சங்கட சமயத்தில் சகோதரி வீடு சேராதே! 4.சிரமம் வந்தாலும் சிநேகிதனைப் பிரியாதே! இந்த நான்கு பொன்மொழிகளையும் நிரூபிக்கிறது ஒரு கதை! படங்கள் இடையிடையே கதைக்கு சுவை சேர்க்கின்றன.