சாருபிரபா பப்ளிகேஷன்ஸ், 106/4, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 96. விலை: ரூ.25).
மாக்ஸிம் கார்க்கி எழுதிய இரண்டு குறுநாவல்களின் தமிழாக்க நூல் இது. தமிழ்ப்படுத்தியவர் சுரா. முதல் குறுநாவலின் தலைப்பே நூலுக்கும் தலைப்பாக அமைந்துள்ளது. கார்க்கியின் முதல் காதலை மையமாகக் கொண்டு எழுதப்பட்டதே முதல் காதல் என்னும் குறுநாவல்.
ஒடெஸ்ஸா என்னும் துறைமுகத்தில் மார்க்சுக்கு ஒருவன் நண்பன் ஆனதை ஒரு பயண நண்பர் என்னும் குறுநாவல் தெரிவிக்கிறது. நான்கு மாதங்கள் மார்க்சுடன் பயணித்த அவன் பொய் சொல்லிவிட்டுப் போய்விடுகிறான். எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தும் உணர்வு நிறைந்த மனிதனான அவன் போன்றவர்களை இப்போதும் நாம் காண முடியும். மொழி பெயர்ப்பு என்று தோன்றாத வகையில் நடை இயல்பாக அமைந்துள்ளது. நாவலில் பெயர்கள் இடம் பெறும்போது தான் இது மொழி பெயர்ப்பு என்ற உணர்வு தோன்றும். மார்க்சிம் கார்க்கியின் படைப்புகளில் மாறுபட்ட நூல் இது என்பதை படிப்பவர்கள் உணர முடியும்.