ஷ்ரீ செண்பகா பதிப்பகம், அ.பெ.எண்.8836, 24 கிருஷ்ணா தெரு, தி.நகர்,ெ சன்னை-17. (பக்கம்: 120. விலை: ரூ.40).
விருப்பமாய் எழுதும் கதாசிரியர் பலருண்டு! திருப்பமாய் எழுதும் கதாசிரியர் ஒருவரே உண்டு! அவரே பழமையில் பூத்த புதுமை எழுத்தாளர் புதுமைப்பித்தன்! எழுத்து நெம்புகோலால் உலகையே புரட்டிப் போட்ட அவர் எழுத்தாளர் பற்றி இந்த நூலில் கூறுகிறார்: `நான் கதை எழுதுகிறேன். அதாவது சரடுவிட்டு அதைச் சகிக்கும் பத்திரிகை ஸ்தாபனங்களிலிருந்து பிழைக்கிறவன்; என்னுடையது அங்கீகரிக்கப்படும் பொய்; அதாவது -கடவுள், தர்மம் என்று பல நாம ரூபங்களுடன் உலக `மெஜாரிட்டி'யின் அங்கீகாரத்தைப் பெறுவது; இதற்குத் தான் சிருஷ்டி, கற்பனாலோக சஞ்சாரம் என்றெல்லாம் சொல்வர். இந்த மாதிரியாகப் பொய் சொல்கிறவர்களையே இரண்டாவது பிரம்மா என்பர். இந்த நகல் பிரம்ம பரம்பையில் நான் இடைக்குட்டி' காஞ்சனை என்ற கதையில் வரும் எழுத்தாளனின் சிந்தனையாக புதுமைப்பித்தன் 62 ஆண்டுகளுக்கு முன் எழுதியது! `கலைமகள்' மாத இதழில் எழுதிய மர்மகதை இப்போது படித்தாலும் திகில் வருகிறது! `காளி கோயில்', `நானே கொன்றேன்', ஒரு கொலை அனுபவம்' என்பது போன்ற மாய மர்மச் சிறுகதைகள் 15 இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு கதையிலும் ஒரு திகில் சம்பவம் நம்மைத் திணற வைக்கிறது! அறுபது ஆண்டுகளுக்கு முன் புதுமைப்பித்தன் புனைந்த இந்த சிறுகதைகளில், மனித வாழ்வின் மர்ம முடிச்சுக்கள் அற்புதமாகக் காட்டப்பட்டுள்ளன. மர்மம், அடிதடி, கொலை, காதல் என்று இன்று பேசப்படும் புதுப்புது கதைகளை, 60 ஆண்டுகளுக்கு முன்பே, எவ்வளவு அற்புதமாக எழுதி, மாய மர்மமாக புதுமைப்பித்தன் சாதித்துள்ளார் என்பதற்கு சான்றே இந்த ரத்தகறை பட்ட சிறுகதைகள்! பயன் தரும் சிறுகதைகளை விட பயம் தரும் கதைகளே இன்று ஹாரிபாட்டர் மூலம் விற்கிறது! பகலில் படித்தாலும் பயம் தரும் புதுமைச் சிறுகதைகள் இவை! சிறுகதைப் பாட்டன் புதுமைப் பித்தன் இன்றைய ஹாரிபாட்டருக்கு முப்பாட்டன்!