ஷ்ரீசெண்பகா பதிப்பகம், த.பெ.எண்.8836, 24, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், சென்னை-17. (பக்கம்: 140,)
தமிழ் இலக்கிய உலகில் மவுனிக்குப் பின் சிறுகதைக் கொள்கைக்கு புது வடிவமும், களமும் அமைத்து தந்து சிறுகதையின் முன்னோடி என்று போற்றப்படும் புதுமைப் பித்தன் (விருத்தாசலம்) வாழ்ந்தது 42 ஆண்டுகளே. அவர் படைத்த 98 சிறுகதைகளுள் `மணிக்கொடி'யில் மட்டும் 29 சிறுகதைகள் வெளிவந்துள்ளன. மதிப்பீடுகளின் சரிவில் மனித வாழ்வை விசாரணை செய்யும், தேடல் குணம் கொண்ட புதுமைப்பித்தன் காண விரும்பியது முழுமையான மனிதனைத் தான். அவரது சிறுகதைகளுள் பெண்களின் அவலத்தை, அவர்களுக்கு நிகழும் கொடுமைகளை மையமாக வைத்து எழுதப்பட்ட 21 சிறுகதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
"ராமாயண பரிச்சயமுள்ளவர்களுக்கு இந்தக் கதை பிடிபடாமல், பிடிக்காமல் கூட இருக்கலாம். அதை நான் பொருட்படுத்தவில்லை' என்ற புதுமைப்பித்தனின் வாசகத்தோடு தொடங்கும், `சாபவிமோசனம்' ராமன் பாதம்பட்டு உயிர்த்தெழுந்த அகலிகை மீண்டும் கல்லான கதை.
"உணர்ச்சி தேவனையும் மிருகமாக்கி விடுகிறது. மனத் தூய்மையில் தான் கற்பு. சந்தர்ப்பத்தில் உடல் களங்கமானால் அபலை என்ன செய்ய முடியும்?" என்னும் கவுதமரை `அகல்யை'யிலும், "அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்து விட்டாள். ஆம் புருஷனுக்குப் பால் கஞ்சி வார்க்கத் தான்! என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே" என்று `பொன்னக'ரத்தையும், "நேரத்தையும், தூரத்தையும் தாண்டிச் செல்லும் யந்திர விசை சிந்தனையிடந்தானே இருக்கிறது..." பிரேதத்தைப் பார்க்கும் போது ஏற்படும் கற்பனையை `விபரீத ஆசையிலும் படம் பிடித்துக் காட்டும் புதுமைப்பித்தனின், `கலியாணி, செல்லம்மாள், வாடாமல்லிகை' போன்றவை இன்றைய வளரும் எழுத்தாளர்கள் படிக்க வேண்டிய கதைகள். புதுமைப்பித்தன் நூற்றாண்டு விழாவில் அவரது படைப்புகள் வெளிவருவது நல்ல முயற்சி, பாராட்டத்தக்கது.