அன்பு இல்லம், கே.கே. பி., காம்ப்ளக்ஸ், 32/107, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 192. ).
கண்டது கற்கப் பண்டிதனாவான். விலங்குகளிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எண்ணிலடங்கா. ஒற்றுமை, சோம்பலின்மை, முன் எச்சரிக்கையாக இருத்தல், நடத்தல், இனப் பற்று, இயற்கையோடு இணைந்து செயல்படுதல் என்பவை அவற்றுள் சில. அவைகள் மூலம் அறிந்து கொள்ள வேண்டிய நீதிகளை சிறு சிறு கதைகள் மூலம் ஆசிரியர் அழகுற விளக்குகிறார்.
சிறுவர்களுக்கு என்று சித்திரங்களுடன் எழுதப்பட்டாலும், தெரிந்து கொள்ள வேண்டிய நீதிகளை அறிந்து கொள்ள விழையும் பெரியவர்களும் சிறியவர்களாக மாறிப் படிக்கும் அளவுக்கு நூலின் படைப்பு, அமைப்பு உள்ளது.
பணிவு, பயமின்மை, உற்சாகம், ஆய்ந்தறிதல், பண்பாடு, பய பக்தி, ஒற்றுமை, சுய திறனாய்வு, பிறர் குறை காண பண்பு, கவலையின்மை, அன்பு, மவுனம், பேராசை இன்மை, வஞ்சமின்மை, தன் நிறைவு, உலக இயல்பு, நம்பிக்கை, கூடா நட்பு, பிறர் நலன் பேணல், கோபமின்மை, சமயோசித புத்தி,முன்னெச்சரிக்கையுடன் செயல்படல், வாக்கு சுத்தம், நியாயம், நேர்மை, அஞ்சாமை, மனிதாபிமானம் என்பவை 102 கதைகளில் கிடைக்கப் பெறுபவை. நீதி நூல் அளவில் நில்லாமல் நடைமுறைக்கும் கொண்டு வருவதால் வாழ்க்கை வளம் பெறும். தனி மனித வாழ்க்கை மட்டுமல்ல சமுதாயமும் வளம் பெறும்.
தெய்வத்தை ஏமாற்ற முடியாது (பக்.27), ஒற்றுமையாக இரு (பக்.31), சிங்கம் - எலி பரஸ்பர உதவி (பக்.80), சோம்பேறியாக இருக்காதே (பக்.181) போன்ற கதைகள் நயமானவை, படிப்பிணைகள். முதல் 23 கதைகளில் விலங்குகள் கதாநாயகர்களாக இல்லை. மற்ற கதைகளில் அவைகள் பல நீதிகளை வலியுறுத்துகின்றன.
டாம் அண்டு ஜெர்ரி, போக்கிமேன், ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் என கார்ட்டூன்களில் ஐக்கியமாகும் சிறுவர், சிறுமியருக்கு, இத்தகைய கதைகளை வாசிக் கும் ஆர்வத்தைத் தூண்டி விட்டால், அவர்களின் உடல் நலனுக்கும் அறிவு வளத்துக்கும் அஸ்திவாரம் இட்டதாக அமையுமே! முயற்சிக்கலாமே! நல்ல கதைத் தொகுப்பு!