நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 320.)
இந்நாவல் முஹம்மது இப்னு காஸிம் - இந்தியாவின் மீது படை எடுத்துச் சிந்து நதிப் பிராந்தியத்தை வெற்றி கொண்ட வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. முஹம்மது இப்னு காஸிமின் படை எடுப்பைப் பற்றி, அவன் சென்ற இடமெல்லாம் கொலையையும், நாசத்தையும் விளைவித்ததாக வரலாறு உண்டு. அதற்கு மாற்று வரலாறும் இருக்கிறது. முஹம்மது இப்னு காஸிம் பெரும் தெய்வ பக்தியும் மத பக்தியும் கொண்டவனென்றும், அவன் சென்ற இடங்களில் சன்மார்க்க முறையிலும் சாத்வீக முறையிலுமே நடந்து கொண்டதாகவும் வரலாறு உண்டென்பதை நாவலாசிரியர் `ஹஸன்' இந்த நூலில் நிரூபித்திருக்கிறார். பிந்திய அடிப்படையில் தமது கதையை அமைத்திருக்கிறார். அதற்காகத் தகுந்த வரலாறு ஆதாரங்களையும் தந்திருக்கிறார்.
இந்த நூல் இஸ்லாமிய தத்துவங்களைச் சிறந்த முறையில் விளக்குகிறது. கொலையும் கொள்ளையுமல்ல இஸ்லாத்தின் நோக்கம், சகிப்புத் தன்மையும் எதிரியிடம் கருணை காட்டும் தன்மையுமே அதன் நோக்கம் என்று விளக்குகிறார் ஹசன். சிறந்த சரித்திர நாவல்!