தமிழ் வாசிக்கத் தெரிந்த யாரும் ஒரு முறையாவது ரா.கி. ரங்கராஜனின் எழுத்துகளை வாசிக்காமல் நகர்ந்து போயிருக்க முடியாது. நாற்பத்திரண்டு ஆண்டு காலம் குமுதம் வார இதழில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர். சிறுகதைகள், நாவல்கள், மொழி பெயர்ப்புகள்,கட்டுரைகள், நகைச்சுவை நாடகங்கள் என எழுத்தின் அத்தனை சாத்தியங்களிலும் முத்திரை பதித்தவர்.
ரங்கராஜனின் எழுத்தின் பிரத்தியேக பலம், அவரது உள்ளோடும் நகைச்சுவை உணர்வு.நடையில் மிளிரும் கம்பீரமான எளிமை. மேலான சத்தியம். வெகுஜன எழுத்துத்துறையில், ஒரு பெரிய தலைமுறையையே அவரது படைப்புகள் பாதித்திருக்கின்றன.
கல்கியையும் எஸ்.ஏ.பி.அண்ணாமலையையும் தமது ஆதரிசங்களாகச் சொல்லும் ரா.கி. ரங்கராஜன், கும்பகோணத்துக்காரர்.எழுபத்தெட்டு வயதில், உற்சாகம் குறையாமல் அண்ணாநகர் டைம்ஸ் இதழில் அவர் எழுதும் நாலுமூலை கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.