விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை-641 001. (பக்கம்: 196).
இந்திய ஆட்சிப் பணியில் உயர் அதிகாரியாகப் பணிபுரியும் வெ.இறையன்பு, இன்றைய இளைஞர்களின் நலனிலும் நாளைய இந்தியாவின் வளத்திலும் அதிக அக்கறை உள்ளவர். எழுத்தை ஆளும் திறமை படைத்த இவர், தனது படைப்பாற்றலையும் சமூக நலனுக்கே அர்ப்பணிக்கும் இயல்புடையவர் என்பதை இந்த நூலின் மூலம் தெரிந்து கொள்கிறோம். தனி மனிதன் உடல் சார்ந்த ஒழுக்கமும் மனம் சார்ந்த தூய்மையும் கொண்டு அறிவின் ஆற்றலைத் துணையாக ஏற்று வாழ வேண்டும் என்பதை, இந்த நூலில் உள்ள 25 கட்டுரைகள் வாயிலாக நமக்கு உணர்த்துகிறார். ஆன்மிகம் என்பது அன்றாட வாழ்க்கையுடன் இரண்டறப் பின்னிப் பிணைந்துள்ளது என்பதை கடவுள் மறுப்பாளர்களுக்கும்,"கடி தோச்சி மெல்ல' உணர்த்துகிறார். ஆன்மிகத்தை விளக்கிக் கூறுகையில், நகைச்சுவையும் சரியான விகிதத்தில் கலந்து கூற வேண்டும் என்பதை நூலாசிரியர் நன்கு உணர்ந்து இந்தக் கட்டுரைகளை வடிவமைத்திருக்கிறார். நகைச்சுவை சற்று தூக்கலாக இருந்து விட்டால், சொல்ல முற்படும் ஆன்மிக கருத்துக்கள் நீர்த்துப் போய் விடக்கூடும் என்பதைப் புரிந்து கொண்டு எழுதியுள்ள இந்தக் கட்டுரைகளைப் படிக்கும்போது வழிபாட்டின் அருமையை வாழ்க்கையின் பெருமையை நாம் உணர்ந்து மகிழ்கிறோம்.