வனிதா பதிப்பகம், 11, நானா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 176).
பிரபல நாளேட்டில் நூலாசிரியர் அவ்வப்போது எழுதிய கட்டுரைகள் இப்போது நூல் வடிவம் பெற்றுள்ளது. தமிழகத்தின் மிகச் சிறந்த பட்டிமன்ற பேச்சாளரான இந்தப் பேராசிரியரின் சொல்லாற்றல் நாம் அறிந்தது தான். ஆனால், எழுத்தாற்றலை இந்த நூல் மூலம் தான் தெரிந்து கொள்கிறோம். 24 கட்டுரைகளின் தொகுப்பு. அம்பேத்கர் தொடங்கி அம்ருதாபிரீதம் வரை, மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாறுவதைப் பற்றிய ஒரு வழி அனுப்பு உபசாரக் கட்டுரையில் ஆரம்பித்து வரி கட்டுவது சுமையா, சுகமா என்ற கேள்வியை எழுப்பி, விழிப்புணர்வு பிரசாரக் கட்டுரை வரை, பலதரப்பட்ட விஷயங்களை சுவைபட ஆசிரியர் எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரைகளில் உள்ளவைகளை ஆழ்ந்து படித்துப் பார்த்தால் நமக்கு இதுவரை தெரியாத பல விஷயங்களை ஆசிரியர் சுவைபட எடுத்துச் சொல்லியிருப்பதை உணர முடிகிறது. பயனுள்ள பல தகவல்களை உள்ளடக்கிய சிறந்த புத்தகம்.