கிழக்கு பதிப்பகம் விலை: ரூ.350
உலகில் தோன்றிய எந்தக் காவியமும் இலியட்டுக்கு நிகரில்லை என்று சொல்வோர் உண்டு. இயேசு பிறப்பதற்குச் சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கிரேக்க மகாகவி ஹோமரின் இரு பெரும் படைப்புகளுள் ஒன்று. (இன்னொன்று ஒடிஸி)
காதலும் வீரமும்தான் காவியத்தின் இரு கண்கள் என்பதை இலியட்டில் இருந்தே உலகம் கற்றது. ஒரு பெண்ணும் அவளுக்காக நடக்கிற யுத்தமும்தான் கதை என்று ஒருவரியிலும் சொல்லிவிடலாம்; ஆனால் இலியட்டை வெறும் கதையாகப் பார்க்க இயலாது. சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு கவிஞனின் பார்வையில் அந்தக் காலகட்டத்து கிரேக்க நாகரிகம், வரலாறு, பெருமைகள் அனைத்தையும் ஏந்தி நிற்கும் ஒரு பொக்கிஷமாகவே பார்க்க வேண்டும்.
பிரம்மாண்டமான இந்தக் காவியத்தில் மன்னர்களும் மனிதர்களும் மட்டுமல்ல. பல்வேறு கடவுள்களும் வருகிறார்கள். பலவித விசித்திர விலங்குகள் தலைகாட்டுகின்றன. இயற்கை சக்திகள் வெவ்வேறு ரூபங்களில் வெளிப்பட்டு, வீரத்துடன் போர் புரிகின்றன. கவிதை மொழியில் அமைந்த இலியட்டை,அதன் எழில் குறையாத உரைநடையில் மொழிபெயர்த்திருக்கும் நாகூர் ரூமி, தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர்; மொழிபெயர்ப்பாளர்.