நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 184).
ஆண், பெண், குடும்பம், உறவு என மனித சமுதாயம் சங்கிலித் தொடராகத் தொடர்ந்து கொண்டே யிருக்கிறது. இந்தத் தொடர் பல சிக்கல்களில் சிக்குண்டு அறுந்து போக முடியாமல் நைந்து போய்க் கொண்டிருப்பதை நாம் பார்க் கிறோம். இந்தக் குழப்பங்களுக்கான ஊற்றுக்கண் பிடிபட மறுக்கிறது. மிகச் சிறந்த உளவியளாளர்களின் அறிவியல் சிந்தனைக்கு மட்டும் தட்டுப்படும் விளக்கங்களும் பரிகாரங்களும் சாமான்ய சராசரி பாமரனின் புரிதல் எல்லைக்குள் பிரவேசிக்க மறுக்கின்றன. உளவியல் நிபுணரான டாக்டர் ஷாலினி, சராசரி பாமர மனிதனுக்கு இந்தப் பிரச்னை குறித்து விளக்கி தெளிவை ஏற்படுத்தியிருக்கிறார்.
உறவுகள் சிதைவுற காரணமாக, தவறான புரிதல்கள், உடல் ரீதியான ஒவ்வாமை மற்றும் மனம் சம்பந்தப்பட்ட சங்கடங்கள் எனப் பலவற்றை பட்டியலிடலாம். தர்ம சங்கடமான இதுபோன்ற விஷயங்களைப் பற்றி எழுதுகையில் சற்று கவனக் குறைவு ஏற்பட்டுவிட்டாலும் ரசாபாசமாகப் போய்விடக்கூடிய வாய்ப்புகள் அதிகம். ஆனால், ஆசிரியர் பொறுப்புணர்ச்சியுடன் மிக லாவகமாக கருத்துக்களையும் குறிப்புகளையும் தமது எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார். இளைஞர்களிடம் இந்தப் புத்தகத்தைப் படிக்கத் தயக்கமின்றிக் கொடுக்கலாம். பயனுள்ள இந்த நூலை எழுதியுள்ள ஆசிரியருக்குப் பாராட்டுகள்.