இந்தியா ஒளிர்ந்திட சிந்தனைகள்: நூலாசிரியர்: பொறியாளர் டாக்டர் தில்லைநாயகம். விற்பனையகம்: சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை-78. (பக்கம்: 104).
நீர் மேலாண்மை , வேளாண்மைத் துறை, தொழில் துறை, கல்வித் துறை, மருத்துவத் துறை, ஆட்சித் துறை, அறிவியல் துறை என ஏழு தலைப்புகளில் இந்தியாவின் பெருமையைப் பெருக்குவதற்கானத் திட்டங்களைத் தந்துள்ளார்.
இஸ்ரேல் நாடு பாலைவனப் பகுதியில் சொட்டு நீர்ப் பாசனம் செய்து நம்மை விடப் பத்து மடங்கு உற்பத்தி செய்கிறது. குட்டி நாடான கியூபா பூச்சிக் கொல்லியோ, ரசாயன உரமோ இல்லாமல் உணவு உற்பத்தியில் முன்னேறியுள்ளது என்று கூறும் ஆசிரியர் நாடு முழுவதும் வெள்ளாடுகள் வளர்ப்பதை தடை செய்ய வேண்டும்.
காட்டாமணக்கு எண்ணெயுடன் டீசல் கலந்து எரிபொருளாக பயன்படுத்தலாம். நாணயச் செலாவணியை அடியோடு ஒழித்து, செக், கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் வரி ஏய்ப்பும், ஊழலும் ஒழியும், சேவை வரியை ரத்து செய்து விட்டு வருமான வரி விகிதத்தை உயர்த்துவதே சரி. போர்ட்லண்ட் சிமென்ட்டில் சாம்பல் கலப்பதைத் தடை செய்ய வேண்டும். கூடங்குளம் அணுஉலை கூடாது, இப்படிப்பட்ட சிந்தனைகள் அரசுக்கும் பொதுமக்களுக்கும் போய்ச் சேர வேண்டும். நடைமுறைப்படுத்த வேண்டிய நல்ல செயல் திட்டங்கள் நிறைந்த பயனுள்ள நூல்.