கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 232).
காலில் நகம் முளைத்த நாளிலிருந்து நாம் எத்தனையோ கஷ்டப்பட்டு, எத்தனையோ இடத்தில் அடிபட்டு, மிதிபட்டு, குட்டுக்கள் வாங்கி முன்னுக்கு வருகிறோம். என் வரையில் நான் ஒவ்வொரு படி முன்னேறியதும் என் சொந்த உழைப்பினால் தான். ஆனால், ஜோசியரிடம் போய்க் கேட்டால்... என்னுடைய முன்னேற்றத்துக்கு திறமை, உழைப்பென்று ஒப்புக் கொள்வாரா?... ஏதோ ஒரு செவ்வாய், சுக்கிரன், ஒரு சூரியன் தான் காரணம் என்பார் (பக்.97). கல்கியின் இப்படிப்பட்ட வாசகங்கள் மூலம் உழைப்பின் மேன்மையையும், "பாரதியைப் போல் படாதபாடு பட்டவர்கள் குறைவு. ஆனால், பாரதி தற்கொலைக்கு முயலவில்லை. வாழ்க்கையைக் குறை கூறவில்லை. படைத்தவனைத் திட்டுவதற்குப் பதிலாக, "எத்தனை கோடி இன்பம் வைத்தாய்' என்று தான் பாராட்டுகிறார் (பக்.225) என்று வாழ்வின் இனிமையையும் எடுத்துக்கூறும் இந்நூல் வாழ்வில் சலிப்புற்று, வேதனை அடைந்து, நொந்து போய் புலம்பும் அனைவரும் படித்தால் நிச்சயம் நலமும் வளமும் பெற வழிகாட்டும் பயனுள்ள துணைவன்.