(மூன்று பாகங்கள்) ஸ்ரீ விஷ்ணு சித்த ஸ்ரீ, 18, வெங்கடேச அக்ரஹாரம், மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 366+368+172)
ஆழ்வார்கள் தம் ஆன்மாவினால் உணர்ந்து அனுபவித்த எம்பெருமானை தம் தூய தமிழ்ப் பாக்களால் பாடி பின் வந்தோர் துய்க்க அருளிச் செய்தனர். அவற்றைத் தொகுத்த ஸ்ரீமந் நாத முனிகள் நாலாயிரத் திவ்ய பிரபந்தமாக நமக்குத் தந்தார். அதில் திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய இரண்டும் ஸ்ரீ ஆண்டாளால் பாடப்பட்டவை. இவற்றின் விரிவுரையாக இந்நூல் வெளிவந்துள்ளது.திருப்பாவையின் இரண்டாம் பாசுரத்தின் நெய்யுண்ணோம், பாலுண்ணோம் என்பதற்கான விளக்கமும் (பக்.23) ஐந்தாம் பாசுரத்தின் "தீயினில் தூசாகும்' என்பதற்கான விளக்கமும் (பக்.55), இருபத்தேழாம் பாசுரத்தின் செவிப்பூவே என்பதற்கான விளக்கமும் (பக்.237) நூலாசிரியரின் ஆற்றலுக்கு எடுத்துக்காட்டான இடங்களாகும்.நாச்சியார் திருமொழியின் தையொரு திங்கள் என்ற பாசுரத்தின் "உன்னையும் உம்பியையும்' என்பதற்கான விளக்கமும் (பக்.287) பொல்லாக் குறளுறுவாய் என்ற சொல்லின் விளக்கமும் (பக்.16) படிக்கப் படிக்க இனிக்கின்றன.இந்நூலின் மூன்றாம் பாகத்தின் 57ம் பக்கம் தவறான வரிசையில் உள்ளது. வடசொற்கள் குறைந்து, பழகு தமிழில் நூல் எழுதப்பட்டிருந்தால் இன்னும் சிறப்புடையதாக இருக்கும். ஸ்ரீ ஆண்டாள் பாசுரங்களை விளக்கும் நூல் இது.