தமிழ்நாட்டின் நீர்வளமும் எதிர்காலமும்: ஆசிரியர்: பொறியாளர் என்.நடராஜன், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நலச் சங்கம், திருச்சி. பக்: 104;
தமிழ் நாட்டின் நீர்ப்பிரச்னை அரசியலை சார்ந்தது மட்டுமல்ல. வாழும் தமிழர்கள் அனைவருக் கும் சம்பந்தம் உடையது.
மொத்தம் 34 ஆண்டுகள் இத்துறையில் பணிபுரிந்து, தேக்கிக் கொண்ட விவரங்கள் - விஷயங்கள் முழுவதையும் ஆராய்ந்து ஆலோசனைகளோடு நூலை வெளியிட்டுள்ளார். வியாபார நோக்கமாக நூல் வெளியிடப்படவில்லை என்பது இப்புத்தகத்தைப் படிக்கும்போதே தெரிகிறது. ஒவ்வொரு கோணத்திலும் அரசாங்கப் பணி புரியும்போதும் நூலாக வழங்கும்போதும் எழுது பொருளான நீர் பிரச்னையோடு ஆசிரியர் எப்படி ஐக்கியமாகி உள்ளார் என்பது தெரிய வருகிறது.
நீர்வளம் அதன் எதிர்காலம், நிலத்தடி நீர்வளம், காவிரி நதி நீர் பாசனம், கர்நாடகம் - தமிழ்நாடு முழுவதிலுமான காவிரி நதி நீர்ப் பாசனம், காவிரி டெல்டா பாசனம், காவிரியில் வெள்ள நீரோட்டம், நீர்வளம் மேம்பாடு அடைய மேற்கொள்ள வேண்டியத் திட்டங்கள், இந்திய நதிகள் இணைப்புத் திட்டங்கள் என ஒன்பது தலைப்புகளில் தம் ஆய்வையும், ஆலோசனையையும், நீர்ப் பிரச்னை மற்றும் தீர்வையும் விளக்குகிறார் ஆசிரியர்.
நில வரை படம், புள்ளி விவரங்கள், அணை நீர் தேக்கப் படங்கள், செய்திகள், குறிப்புகள், வரலாறு, தற்கால நிலை, எதிர்கால கணிப்பு என்ற பற்பல தொகுப்புகள் - கூற வந்த விஷயத்தை சான்றோடு பிரகடனப்படுத்துவது முதலியன இந்நூலின் தனிச்சிறப்பு.
300 - 400 ஆயிரம் மில்லியன் கன அடி நீரை காவிரி படுகைக்கு திருப்பி விடுவதால் கர்நாடகம் தன் சுவைகளையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்பது கடல் நீரை மாற்றி பருகும் நீராக ஆக்கினாலும் முழு பயன் தராது என்பது ஊற்று நீரின் மோட்டார் - ராட்சச பயனீட்டளவினால் தட்டுப்பாட்டை விவரித்துக் கூறுவது ஆகியவை அனைவருக்கும் மிகவும் உதவும்.
நீர் இருப்பை சேமிக்க, ஏரி பாசனத்தை மேம்படுத்த வழிகள் (பக்கம்: 14-16) ஆங்காங்கு கட்டப்படும் இலக்கிய மேற்கோள்கள் (பக்கம்: 1, 15, 21, 52, 65, 78, 94), மேம்பாட்டுத் திட்டங்கள் (95-98), நதி நீர் இணைப்புத் திட்டங்கள் (பக்கம்: 99) ஆசிரியர் இட்டுக் காட்டும் விஷயத்தில் வாசகர்களை உற்சாகப்படுத்துகிறது.
ஆசிரியரின் திட்டங்கள் - யோசனைகள் நடைமுறைப்படுத்த முற்பட்டால், நாடும் நாமும் வளம் பெறுவோம் என்பதில் ஐயமில்லை.