வயல்வெளிப் பதிப்பகம், இடைக்கட்டு, உட்கோட்டை (அஞ்சல்), கங்கைகொண்ட சோழபுரம் (வழி), அரியலூர் மாவட்டம் 612 901. (பக்கம்: 200).
வேங்கட மலைக்கும் குமரி முனைக்கும் இடைப்பட்ட பகுதியில் தொல்காப்பியர் காலத்தில் தமிழகம் விளங்கியிருக்கிறது. தற்காலத்தில் மேற்குப் பகுதியில் உள்ள கேரளம் நீங்கலாகத் திருத்தணி முதல் தென் குமரி வரை தமிழகம் அமைந்திருக்கிறது.
இந்த வரையறை ஒரு மாநிலத்தின் எல்லை என்ற அளவிற்கு மட்டுமே பொருந்தும். தமிழின் எல்லை உலகம் முழுவதும் என்பது இந்த நூல் நமக்கு தெள்ளத் தெளிவாக்குகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டு தமிழ்த் தொண்டாற்றிவரும் தமிழ் அறிஞர்கள் 30 பேரின் வாழ்வை இந்த நூலில் தந்திருக்கிறார் இளங்கோவன்.
தமிழகத்தில் வாழ்ந்து மறைந்த தமிழ் அறிஞர்களின் வாழ்வே தெளிவாகப் புரிந்து கொள்ளப்படாத நிலையில், உலகின் பல பகுதிகளில் வாழ்கிற தமிழ் அறிஞர்களின் வாழ்வைத் திரட்டித் தந்திருப்பது ஓர் அரிய முயற்சி. நூலாசிரியர் பல்வேறு நாடுகளுக்குச் சென்றும், மடல் வாயிலாகவும் இந்தத் தகவல்களைப் பெற்றிருப்பது அவரது தமிழ்ப் பற்றிற்கும் விடா முயற்சிக்கும் சான்று அளிக்கின்றன.
முகிலை ராசபாண்டியன்.