சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை78. (பக்கம்: 464).
தஞ்சைப் பெரிய கோவில் கட்டி முடித்து, ஆயிரம் ஆண்டு நிறைவு பெறும் வேளையில் தஞ்சைக் கல்வெட்டுகள் என்னும் இந்நூல் வெளிவந்திருப்பது சிறப்புடையது. இராஜ ராஜ சோழன், தான் எடுத்த கோவிலுக்குச் செய்த அறப்பணிகள் அனைத்தையும் தஞ்சைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. அவை அனைத்தையும் கல்வெட்டுச் செய்தியாக இந்த நூல் தெளிவுபடுத்துகிறது.
இராஜ ராஜன் காலத்தில் எழுதப்பட்ட பதினெட்டுக் கல்வெட்டுகளும் சேர்ந்து, மொத்தம் 64 கல்வெட்டுகளை இந்த நூல் பதிவு செய்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோவிலுக்கு இராஜராஜன் வழங்கிய பொற்கலன்களின் எடை 41559 கழஞ்சு. ஒரு கழஞ்சு என்பது இரண்டு கிராம் எடையை விடச் சற்றுக் கூடுதல் கொண்டது.
இராஜராஜன் வழங்கிய செப்புத் திருமேனிகள், குந்தவை வழங்கிய செப்புத் திருமேனிகள், அரசு அதிகாரிகள் வழங்கிய செப்புத் திருமேனிகள் எனப் பல்வேறு திருமேனிகள் தஞ்சைக் கோவிலில் உள்ளன என்பதையும் நூலாசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார்.
தஞ்சைப் பெரிய கோவிலில் உள்ள ஓவியங்கள் பலவும் படியெடுத்துத் தரப்பட்டுள்ளது பாராட்டிற்குரியது.