விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
இந்து மதம் முக்திக்கான வழிகளாக ஞான யோகம், கர்ம யோகம், பக்தி யோகம் என மூன்று வழிகளைப் பரிந்துரைக்கிறது.
யாகங்கள், மந்திரங்கள், ஆத்ம விசாரங்கள், பிரபஞ்சம் ஏன் தோன்றியது, எப்படித் தோன்றியது என்பது போன்ற விஷயங்களை முன்வைக்கும் ஞானயோகமும், கர்மயோகமும் அனைவராலும் பின்பற்ற முடியாதவை.
கல்லாதவர்களும், ஏழைகளும், முதியோரும், குழந்தைகளும் என எளிய மக்களும் கடைத்தேற வழிவகுக்கும் நோக்கிலேயே பக்திமார்க்கம் முன்வைக்கப்பட்டது.
இந்தியாவில் _ ஒவ்வொரு மாநிலத்திலும் பக்தி இயக்கமானது பெரும் ஊக்கத்துடன் வற்றாத ஜீவ நதியாக, கரைகளை உடைத்துக் கொண்டு பாய்ந்து மக்களை நல்வழிப்படுத்தியுள்ளன. அந்த பக்தி இயக்கம் உரைநடைக் காவியங்களாகவும் கவிதைகளாகவும் பொங்கிப்
பிரவாகித்தன. அந்தவகையில், மஹாராஷ்டிரத்தில் பக்தி இயக்கத்தின் வளர்ச்சிக்கு அபங்கப் பாடல்கள் பெரும் பங்காற்றியிருக்கின்றன.
துக்காராம், நாமதேவர், ஏக்நாத், ஞானேஸ்வர் என எண்ணற்ற மகான்கள் தோன்றி ஆயிரக்கணக்கில் அபங்கங்கள் பாடி மக்களை மகிழ்வித்து, பக்திப் பாதையில் அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த நூலில், அபங்கம் என்றால் என்ன என்பதை விவரித்தும், துக்காராம் மஹாராஜின் வாழ்க்கை வரலாறையும் பிணைத்து உணர்ச்சிபூர்வமாக தொகுத்திருக்கிறார் நூலாசிரியர் என்.ராஜேஸ்வரி. அபங்கங்களைச் சொல்லி, அதற்குப் பொருளும் உரைத்து, அந்த அபங்கம் எந்தச் சூழ்நிலையில் இயற்றப்பட்டிருக்கும் என்பதையும் ஒரு கதா காலட்சேபம் போல அழகாக விவரித்திருக்கிறார்.
பண்டரிபுரம் குறித்து அதி விசேஷத் தகவல்களும், அபங்கம் கற்க விரும்புவோருக்கு உதவும் வகையில் அதைக் கற்றுத் தரும் பரிவார்ஒ அமைப்பின் அனைத்து தொலைபேசி எண்களும் கடைசி அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளன.
புத்தகங்கள் என்பவை, கனி நிறைந்திருக்கும் தோட்டத்துக்குப் போவது எப்படி என்ற வழிக்குறிப்புகளைத் தரக்கூடியவை. அதன் வழியில் சென்றால் தீஞ்சுவைக் கனிகளைப் பறித்து உண்டு ஆனந்தம் அடையலாம்.
அபங்கம் என்னும் நற்கனிகள் நிறைந்த தோட்டத்துக்கு வாருங்கள்... பக்தி ரசம் சொட்டும் அதன் சாறைப் பருகுங்கள்..!