விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
சிறுவன் சார்லி _
சாக்லேட் என்றால் உயிர் இவனுக்கு. சாக்லேட் தயாரிப்பில் மர்ம மனிதராகத் திகழும் வோன்காவின் ஃபேக்டரியைக் கடந்து தினமும் செல்லும் சார்லிக்கு அந்தத் தொழிற்சாலைக்குள் சென்று பார்வையிட வேண்டும் என்கிற அவா.
ஒருசமயம், ஏதோ ஐந்து சாக்லேட்டுகளில் மட்டும் தங்க டிக்கெட் இருப்பதாகவும் அவை கிடைக்கப்பெறுபவர்களுக்கு வோன்காவின் ஃபேக்டரியைச் சுற்றிப் பார்க்கும் அதிர்ஷ்டம் அடிக்கும் என்றும் அறிவிப்பு வருகிறது. அந்த ஐந்து டிக்கெட்களும் ஐந்து சுட்டிகளிடத்தில் கிடைக்க, அவர்கள் அனைவரும் சேர்ந்து ஃபேக்டரியினுள் செய்யும் அமர்க்களங்களின் தொகுப்புதான் இந்தக் கதை. அதுவும் சார்லியின் கையில் அந்த சாக்லேட் கிடைப்பது வரையிலான பகுதிகள் ருசியான சஸ்பென்ஸ்.
வார்த்தைக்கு வார்த்தை கதையின் அடுத்த கட்டத்தை அறிந்து கொள்ளத் துடிக்கும் ஆர்வத்தை அழகாக உருவாக்கியிருக்கிறார் ரோல் தால். இதைப் படிக்கும் சுட்டிகள் ஒவ்வொருவருக்கும், ஃபேக்டரியைச் சுற்றிப் பார்க்கும்போது ஏற்படும் அனுபவங்கள், பரபரப்பான திரைப்படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தும்.
இந்தக் கதை, ‘சுட்டி விகடன்’ இதழில் தொடராக வெளியானபோது சிறுவர்களின் உள்ளங்களைக் கொள்ளைகொள்ளும் அளவில் கதையின் போக்கு வெகு சுவாரஸ்யமாகவும் சுறுசுறுப்பாகவும் அமைந்திருப்பதாகப் பலரும் பாராட்டினார்கள். ரோல் தால் உருவாக்கியிருக்கும் இனிப்பான கதையின் ஜீவன் குலையாமல், கதை சொல்லும் விதத்தில் அதன் சுவை குன்றாமல் அழகாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார் பாஸ்கர் சக்தி.