விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
நமக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து பட்டிதொட்டிகளிலெல்லாம் பட்டிமன்றம் நடத்த பேச்சாளர்களுக்குக் கை கொடுத்து வருகிறது கம்ப ராமாயணம்.
தசரதனில் ஆரம்பித்து விபீஷணன் வரையில் கம்ப ராமாயணத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்திருக்கிறார்கள் இலக்கிய ஆர்வலர்கள். வால்மீகி ராமாயணத்துடன் கம்ப ராமாயணத்தை ஒப்பிடுவார்கள். சீதையையும் கண்ணகியையும் ஒப்பிட்டுப் பேசுவார்கள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
இப்படி அத்தனை பேரும் படைப்பைப் புகழ்ந்து கொண்டிருக்க, இந்த நூலில் படைப்பாளன் கம்பனைப் பாடுபொருளாக எடுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர் வாலி.
தன் கவிதையால் தமிழ் ஏற்றம் பெறவும், நடையில் மாற்றம் பெறவும் செய்த கம்பனுக்கு, கவிஞர் வாலி தீட்டியுள்ள ஓவியப் பாக்கள், படிக்கும்போதே பரவசப்படுத்தும்.
கம்பன் போல் பூமிதனில் யாம் கண்டதில்லை என்பது பாரதியின் வாக்கு. இங்கே கவிஞர் வாலி, கவி புனைய முனையும் கவிஞர்களுக்கு குறிப்பு தருகிறார். முதலில் கம்பனைத் தொழுது, கம்பன் கவி படித்து உள்வாங்கி, பின்னர் கவியெழுதத் தொடங்குமாறு சொல்கிறார்.
கவிச்சுவையும் சந்த நயமும் இலக்கணக் கட்டுப்பாடும் கைகோத்து இந்தக் கம்பன் எண்பதில் களிநடம் புரிந்திருக்கிறது.
வாலியின் வெண்பாக்களுக்கு எளிய நடையில் உரையெழுதி, தமிழ் உரைநடைக்கு சுவை சேர்த்திருக்கிறார் பேராசிரியை வே.சீதாலட்சுமி. கவியும் உரையும் கலந்த இந்த நூல் இலக்கியத்தை சுவைப்பவர்களுக்கு அற்புத விருந்து.