விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
சுட்டிகளுக்கான கதைகள் மற்றும் நாடகங்கள் எழுதுவதில் உலகப் புகழ் பெற்ற ‘ரோல் தால்’ எழுதிய மிகச் சிறந்த நூல் ‘மட்டில்டா’.
பொறுப்பு உணர்வு அற்ற பெற்றோருக்கு மகளாகப் பிறந்த மட்டில்டா, அவர்களால் பலவகைகளில் அவமானப் படுத்தப்படுகிறாள். பள்ளித் தலைமை ஆசிரியையும் மிகவும் கொடூரமானவளாக இருக்கிறாள். அவர்களைப் பழிவாங்கப் புறப்படும் மட்டில்டாவுக்கு சில அபார சக்திகள் கைகூடுகின்றன. அந்த சக்தியை வைத்து பெற்றோரையும், ராட்சஸியான பள்ளித் தலைமை ஆசிரியரையும் எப்படி பழிவாங்குகிறாள் என்பதுதான் கதை.
இசைமேதை பீத்தோவன் ஐந்து வயதிலேயே அற்புதமாக பியானோ வாசித்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட ரோல் தாலுக்கு, உண்மையிலேயே குழந்தைகளாக இருக்கும்போது நம்மிடம் அபாரத் திறமைகள் ஒளிந்திருக்கக்கூடும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதை வளர்த்தெடுத்தபோதுதான் அபார ஆற்றல் கொண்ட மட்டில்டா போன்ற சுட்டிக் குழந்தை கதாபாத்திரங்கள் உருவாயின.
எப்போதும் ‘படி... படி...’ என்று பிரம்பு எடுக்கும் ஆசிரியர்கள், ‘உனக்கு ஒன்றும் தெரியாது... பெரியவங்க சொல்றதைக் கேளு’ என்று மட்டம் தட்டும் பெற்றோர் ஆகியோர்தான் குழந்தைகளைப் பொறுத்த வரையில் பிரதான வில்லன்கள்! ‘இவர்களிடமிருந்து எப்படிடா விடுதலை பெறுவது?’ என்று தங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டுப் பறந்து கொண்டேயிருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மட்டில்டாவின் சாகசங்கள் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்!
பெரியவர்களாகிய நமக்கும் ஒரு காலத்தில் இது போன்ற அனுபவங்கள் இருந்தது உண்டு! எனவே, நம் இதழ்களிலும் புன்முறுவலைப் பூக்க வைப்பாள் இந்த மட்டில்டா!