விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல்
வேறொன்றறியேன் பராபரமே!
ஆனந்த விகடனில் ஓவிய மேதை மாலி அமைத்துக் கொடுத்த நகைச்சுவை ராஜபாட்டையில் பயணப்பட்டு வாசகர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தவர்களின் பட்டியல் நீளமானது. ராஜு, தாணு, கோபுலு, ஸ்ரீதர், மதன் என்று விகடன் பக்கங்களை தங்கள் ஜோக்குகளால் அலங்கரித்து மகிழ்ந்து, மகிழ்வித்தவர்கள் இவர்கள். நாம் அன்றாடம் சந்திக்கும் பல்வேறு காரெக்டர்களையே காமெடியாக வரைந்து களிப்பூட்டியவர்கள். ஜோக் வாசகங்களைப் படிப்பதற்குமுன் இவர்கள் வரைந்த படங்களாலேயே புன்னகைக்க வைத்தவர்கள்!
1949_ல் விகடனுக்கு அறிமுகமானவர் ஸ்ரீதர். கிட்டத்தட்ட முப்பது வருடங்களாகத் தன்னுடைய ஜோக்குகள் மற்றும் கார்ட்டூன்கள் மூலமாக விகடன் பக்கங்களில் புகுந்து விளையாடியவர்! கால் பக்கம், அரைப் பக்கம், முக்கால் பக்கம், முழுப் பக்கம் என்று அந்த நாட்களில் இவர் பங்களிப்பு செய்த நகைச்சுவைத் துணுக்குகள் ஏராளம்!
இந்தத் தொகுப்பில் 50_களில் விகடனில் ஸ்ரீதர் வரைந்த ஜோக்குகளில் சில அணிவகுக்கின்றன. அரசியல் ஜோக், ஆபீஸ் ஜோக், வீட்டு ஜோக், கல்யாண ஜோக் என்று கலந்துகட்டி ஸ்ரீதர் வரைந்துள்ள ‘அந்தநாள்’ ஜோக்குகளைப் படித்தால் இந்த நாளிலும் சிரிக்காமல் இருக்கமுடியாது!
விகடன் பிரசுரம் இதுவரை வெளியிட்டுள்ள ஜோக் புக் வரிசையில் ‘ஸ்ரீதர் ஜோக்ஸ்’ பெருமையுடன் இணைகிறது.
படித்து, சிரித்து இன்புறுங்கள்!