விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
வள்ளலார் என்றவுடன் அவருடைய ஜீவ காருண்யமே நினைவுக்கு வரும். வாடிய பயிரைக் கண்டு வாடிய கருணை உள்ளம் மிக்க உத்தமர். கருணைக்காகவே வாழ்ந்த வள்ளலாரின் சீரிய வாழ்க்கை வரலாற்றை விவரிப்பதுதான் இந்த நூல்.
குழந்தையாக இருந்தபோதே ஆன்ம முதிர்ச்சியைக் காட்டியிருக்கிறார். ஆசான் ஒருவரிடம் சென்று நன்கு கற்று அதன் பிறகு ஆன்மிகச் சொற்பொழிவு ஆற்றிய அவருடைய அண்ணனைப் போல் இல்லாமல், எங்கும் சென்று கற்காமலேயே சிறப்பான சொற்பொழிவை நிகழ்த்தி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார். இறைவன் தனக்கு அளித்த அருட்கடாட்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இதைப் போன்ற பல நிகழ்ச்சிகளை நூலாசிரியர் பா.சு.ரமணன் இந்த நூலில் சுவையாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
துன்பங்களையும் புன்முறுவலுடன் சந்தித்தவர் என்பதோடு அதற்காக எவரையும் குறை கூறாத உத்தமராகவும் வாழ்ந்தவர் வள்ளலார். ஆனாலும் அவரை சிலர் தவறாக எடைபோட்டு சோதித்த சம்பவங்களும் உண்டு.
ஒருமுறை புலமைமிக்க தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் சங்க காலப் பாடல்களைப் போல, தானே கடினமான புலமை வாய்ந்த சில பாடல்களை இயற்றி அதை சங்க காலப் பாடல் என்று கூறி அவற்றின் அர்த்தத்தை விளக்கும்படி கூறினாராம். அது சங்க காலப் பாடல் அல்ல என்று வள்ளலார் கண்டுபிடித்து மறுத்ததோடு, அவை இலக்கணம் தெரியாத யாராலேயோ எழுதப்பட்டிருக்கின்றன என்று அவர் மனம் புண்படாதவாறும், அதேநேரம் தன் கருத்தில் சற்றும் மாறாமலும் பணிவுடன் கூறினார்.
இதைப்போன்ற பல சம்பவங்களை நூலாசிரியர் அழகாக எடுத்துரைக்கிறார்.
சமரச சன்மார்க்க நெறியைக் கண்ட வள்ளலார் வாழ்க்கை நம் வாழ்வுக்கு நிச்சயம் நம்பிக்கை ஊட்டும்.