விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
நீதியானது சிறுகதையில் துருத்திக்கொண்டு வெளிப்படக்கூடாது என்று சிறுகதைக்கு இலக்கணம் சொல்வார்கள். அதேமாதிரி, நல்ல இலக்கியத்துக்கு என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைவிட, எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதே முக்கியம் என்றும் அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள்.
இருபதாம் நூற்றாண்டு தொடங்கி சிறப்பான இலக்கிய வகையாக இன்றும் செழித்துக் கொண்டிருக்கும் சிறுகதை வடிவை, ஜே.வி.நாதன் நயமாகக் கையாண்டிருப்பதோடு, சிறுகதை இலக்கணங்கள் எதையும் அவர் மீறவில்லை என்பதற்கு சாட்சி, இந்தத் தொகுப்பில் உள்ள அவருடைய சிறுகதைகள்.
இந்தத் தொகுப்பில், ஒரு இன்டர்வியூவில்..., கிழவி ஆகிய இரண்டு சிறுகதைகள், இலக்கியச் சிந்தனை அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான பரிசு பெற்றவை. கதை சொல்லும் உத்தியில் சிறப்பான ஒரு நடைமுறையை ஒரு இன்டர்வியூவில்... கதையில் கையாண்டிருக்கும் நூலாசிரியர், உழைப்பின் மேன்மையை, பாசத்தின் சிறப்பை கிழவி கதையில் யதார்த்தமாகச் சொல்லியிருக்கிறார்.
அதிதி _ கஸ்தூரி கன்னட மாத இதழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது. பணம் வந்ததும் பழைய நட்பை உதாசீனப்படுத்துவதும், அதிதி உபசாரம் என்பதைத் தவறாகப் புரிந்து செயல்படுவதும், முன்பின் தெரியாத அபலைக்கு இன்னொரு அபலை அபயக்கரம் கொடுப்பதும் அதிதி சிறுகதையில் நயமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பதவியில் இருக்கும் வரைதான் மேலதிகாரிக்கு மரியாதை காட்டப்படும் என்பது, பழையன கழிதலும் சிறுகதையில் நகைச்சுவையாகச் சொல்லப்பட்டு, நம்மைச் சிரிக்க வைக்கிறது. மேலதிகாரி, தன் சிங்கப்பூர் நண்பருக்கு அனுப்புவதற்காக கழுதைகள் தேவை என்றதும், கழுதை வாங்குவதற்கு ஒரு அலுவலர் பட்ட பாடு நகைச்சுவை மிளிர, சிங்கப்பூருக்கு சில கழுதைகள் என்ற தலைப்பில் எழுதப்பட்டிருக்கிறது.
வாழ்வின் நிகழ்வுகளை மனிதாபிமானத்துடன் பார்ப்பதோடு, யதார்த்தமாகவும் தன் கதைகளில் சித்திரிக்கும் பணியை திறம்படச் செய்திருக்கிறார் இந்நூலின் ஆசிரியர்.